செவ்வாய்க்கிழமை (ஜூலை 14) காலை, தொழில்நுட்பக் கோளாறு காரணமாகப் பேருந்து நிறுத்தங்களை பேருந்துகள் சென்றடையும் நேரத்தைக் காட்டும் காட்சித் திரை ஏறத்தாழ 95 நிமிடங்களுக்கு முடங்கியது.
காலை 6.15 மணியளவில் ‘MyTransport.SG’ செயலி மற்றும் பேருந்து நிறுத்தங்களில் பேருந்து வருகை நேரத்தைக் காட்டுவதில் தொழில்நுட்பச் சிக்கல்கள் இருப்பதை நிலப் போக்குவரத்து ஆணையம் அறிவித்தது. எனினும், பேருந்துச் சேவைகள் வழக்கம் போல் எவ்விதத் தடையுமின்றி இயங்கின.
இதற்கிடையே, காலை 6.40 மணி நிலவரப்படி ‘MyTransport.SG’ செயலியில் பேருந்து வருகை நேரங்கள் எதுவும் பதிவாகவில்லை. ஆனால், ‘Singabus’ போன்ற பிற போக்குவரத்துச் செயலிகளில் பேருந்து நேரங்கள் வழக்கம்போல் காட்டப்பட்டன.
பின்னர், காலை 7.50 மணி அளவில் தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டு, காலை 8.10 மணியளவில் ‘MyTransport.SG’ செயலியில் பேருந்து வருகை நேரக் காட்சி முழுமையாக வழக்கம் போல் இயங்கத் தொடங்கியது.
ஏற்கெனவே கடந்த ஜனவரி மாதத்திலும் ஜூன் மாதம் 12ஆம் தேதியிலும் இந்தச் செயலியில் மென்பொருள் குறைபாடு காரணமாக இதுபோன்ற தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டு, சில மணி நேரங்களுக்குப் பேருந்து நேரக் காட்சி முடங்கியது குறிப்பிடத்தக்கது.

