பேருந்து வருகை நேரத்தைக் கணக்கிடுவதில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பப் பிரச்சினையை முழுமையாகக் களைவதற்கு இன்னும் நான்கு நாள்கள் ஆகும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
வியாழக்கிழமை (ஜனவரி 22) மாலை வெளியிட்ட அறிக்கையில், சில பேருந்துகளின் கணினிக் கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாற்றை அதன் பொறியாளர்களும் அமைப்பு ஒப்பந்தக்காரரும் கண்டறிந்ததாக ஆணையம் கூறியது.
இது பேருந்துகளுக்கும் மத்திய கணினி சேமிப்பகத்துக்கும் இடையிலான, மதிப்பிடப்பட்ட வருகை நேரங்களைக் கணக்கிடும் தரவுப் பரிமாற்றங்களுக்கு இடையூறு விளைவித்தது. கிட்டத்தட்ட பாதிப் பேருந்துகள் பாதிக்கப்பட்டுள்ளன.
2024ஆம் ஆண்டு இறுதி நிலவரப்படி சிங்கப்பூரில் 5,841 பொதுப் பேருந்துகள் உள்ளன.
இந்தப் பிரச்சினையைச் சரிசெய்ய, பாதிக்கப்பட்ட அனைத்துப் பேருந்துகளிலும் கணினி அமைப்பு மறுசீரமைக்கப்பட்டு வருவதாக நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.
இது வாகனங்களில் உள்ள சாதனங்களைச் சரிசெய்ய வேண்டும் என்பதால் கிட்டத்தட்ட நான்கு நாள்கள் ஆகும் என்று ஆணையம் எதிர்பார்க்கிறது.
நிலப் போக்குவரத்து ஆணையம் ஜனவரி 10ஆம் தேதி முதலில் இந்த பிரச்சினையைக் கண்டறிந்தது.
இந்த வாரத்தில் மேலும் தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறியது.
தொடர்புடைய செய்திகள்
ஜனவரி 21ஆம் தேதி பொதுமக்களுக்குத் தொழில்நுட்பப் பிரச்சினை அறிவிக்கப்பட்டது.
இருப்பினும், பேருந்துச் சேவைகள் வழக்கம்போல திட்டமிடப்பட்ட நேரத்தில் தொடர்ந்து இயங்குகின்றன என்று நிலப் போக்குவரத்து ஆணையம் மேலும் கூறியது.

