ஜனவரி 28க்குள் 85% பேருந்து வருகைநேர அமைப்பு வழக்கநிலைக்குத் திரும்பும்

ஜனவரி 28க்குள் 85% பேருந்து வருகைநேர அமைப்பு வழக்கநிலைக்குத் திரும்பும்

1 mins read
cc1b1cd0-3602-4d8b-9e92-14408cf4110b
பாதிக்கப்பட்ட 3,000 பேருந்துகளுக்கான வன்பொருளை கைமுறையாகப் புதுப்பிப்பதை நிலப் போக்குவரத்து ஆணையம் முடித்துள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பேருந்து நிறுத்தக் காட்சித் திரைகளிலும் செயலிகளிலும் பேருந்து வரும் நேரத்தைக் காட்டும் பேருந்து வருகைநேர அமைப்பானது புதன்கிழமை (ஜனவரி 28) காலைக்குள் 85 விழுக்காடு வழக்கநிலைக்குத் திரும்பும்.

ஜனவரி 26ஆம் தேதியன்று அவ்வமைப்பு முழுமையாகச் சரிசெய்யப்பட்டுவிடும் என எதிர்பார்க்கப்படுவதாக முன்னர் அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கு ஒரு வாரத்திற்குப் பிறகே, அதாவது அடுத்த வாரத் தொடக்கத்தில்தான் முழு அமைப்பும் முழுமையாக மீட்டமைக்கப்படும்.

நிலப் போக்குவரத்து ஆணையம் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 27) ஒரு செய்திக்குறிப்பில் இந்தத் தகவலைப் பகிர்ந்துகொண்டது. ஜனவரி 19ஆம் தேதி வாரத்தில் அடையாளம் காணப்பட்ட 3,000 பாதிக்கப்பட்ட பேருந்துகளுக்கான வன்பொருளைக் கைமுறையாகப் புதுப்பித்துள்ளதாக அது குறிப்பிட்டது.

அதே நேரத்தில், பேருந்து வருகைநேர அமைப்பை முழுமையாக மீட்டெடுக்க, இதேபோன்ற கைமுறை வன்பொருள் புதுப்பிப்புகள் தேவைப்படும் மேலும் 1,000 பேருந்துகளை அது அடையாளம் கண்டுள்ளது.

சேவை நேரத்திற்குப் பிறகுதான் இந்தச் செயல்முறை நடைபெற முடியும் என்பதால், இந்த வாரத்தில் அந்தப் புதுப்பிப்புகள் நிறைவுபெற்றுவிடும் என்று ஆணையம் மேலும் கூறியது.

பேருந்துச் சேவைகள் திட்டமிட்டபடி தொடர்ந்து இயங்கும் என்று அது தெரிவித்துள்ளது.

“பிரச்சினையைத் தீர்ப்பதில் நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வரும் நிலையில், பொறுமையாக இருந்த பயணிகளுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்; ஏற்பட்ட சிரமங்களுக்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்,” என்று ஆணையம் தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்