பேருந்து வருகை நேரச் சேவையில் நான்கு முறை ஏற்பட்ட தடங்கல்களில் மூன்றுக்கு நிலப் போக்குவரத்து ஆணையம் அவற்றுக்குப் பொறுப்பான மூன்றாம் தரப்பு நிறுவனம் ஒன்றுக்கு அபராதம் விதித்துள்ளது.
பாட்டாளிக் கட்சியின் அல்ஜுனிட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கென்னத் தியோங் நாடாளுமன்றத்தில் கேட்ட கேள்விக்கு, செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 4) போக்குவரத்து அமைச்சர் ஜெஃப்ரி சியாவ் எழுத்துபூர்வ பதில் அளித்தார்.
ஜனவரி, ஏப்ரல், ஜூன், ஜூலை ஆகிய மாதங்களில் பேருந்து வருகை நேரச் சேவையில் நான்கு முறை தடங்கல்கள் ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார்.
ஒன்றோடொன்று தொடர்பில்லாத அம்சங்கள் செயலிழந்ததால், அந்தத் தடங்கல்கள் ஏற்பட்டதாகத் திரு சியாவ் கூறினார்.
அந்தத் தடங்கல்கள் காரணமாக, பேருந்து நிறுத்துமிடங்களிலும் நிலப் போக்குவரத்து ஆணையத்தின் ‘மை டிரான்ஸ்போர்ட்.எஸ்ஜி’ போன்ற செயலிகளிலும் தவறான பேருந்து வருகை நேரங்கள் காண்பிக்கப்பட்டன.
அதோடு, நீண்ட காத்திருப்பு நேரங்கள் காண்பிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
திரு சியாவின் பதிலில் பெயர் குறிப்பிடப்படாத அந்த நிறுவனம், முன்பு ‘எல்இசிஐபி சிங்கப்பூர்’ (LECIP Singapore) என அடையாளம் காணப்பட்டிருந்தது.
அந்நிறுவனம் பேருந்து வருகை நேரச் சேவையை நிர்வகிக்கவும் பராமரிக்கவும் 2015 முதல் நிலப் போக்குவரத்து ஆணையத்துடன் இணைந்து பணியாற்றி வந்தது.
2027ஆம் ஆண்டின் இறுதிக்குள் புதிய மேகக்கணி சார்ந்த அமைப்புமுறை அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு, தற்போதைய பேருந்து வருகை நேரச் சேவைக்கான இடைக்காலப் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து திரு தியோங் கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த திரு சியாவ், ஆணையம் பேருந்து வருகை நேரச் சேவையின் செயல்பாட்டுக் கண்காணிப்பை அதிகரித்துள்ளதாகவும் தடங்கல்களுக்கான உடனடிப் பதில் நடவடிக்கைகளை வலுப்படுத்தியுள்ளதாகவும் கூறினார்.


