செம்பவாங்கில் இரண்டு பேருந்துகள் மோதல்; மருத்துவமனையில் ஓட்டுநர்

2 mins read
8fb624ef-2bfc-4916-8aee-214af7ec404e
இரண்டு பேருந்துகள் விபத்தில் சிக்கியதில் ஓட்டுநர் ஒருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். - படம்: சிங்கப்பூர்ரோட்ஆக்ஸிடண்ட்.காம்/ஃபேஸ்புக்

செம்பவாங்கில் இரண்டு பேருந்துகள் மோதியதில் ஓட்டுநர் ஒருவர் காயம் அடைந்தார்.

சனிக்கிழமை (ஜூன் 8) 11ஏ செம்பவாங் விஸ்தாவில் விபத்து நிகழ்ந்தது. சேவையில் இல்லாத இரண்டு டவர் டிரான்சிட் பேருந்துகள் இதில் மோதிக் கொண்டன.

இரவு 8.55 மணியளவில் தகவல் கிடைத்து விபத்து நிகழ்ந்த இடத்துக்கு குடிமைத் தற்காப்புப் படை விரைந்து சென்றது.

காயம் அடைந்த ஓட்டுநர் கூ டெக் புவாட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மற்றொருவருக்கு சிறிய சிராய்ப்புக் காயம் ஏற்பட்டது. இவர், மருத்துவமனைக்குச் செல்ல மறுத்துவிட்டார் என்று குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

விபத்து தொடர்பான புகைப்படங்கள் ‘சிங்கப்பூர்ரோட்ஸ்ஆக்ஸிடண்ட்.காம்’ என்ற இணையப்பக்கத்தில் பதிவேற்றப்பட்டிருந்தன. அதில் பச்சை நிற பேருந்து, வெள்ளைநிறப் பேருந்தின் பின்பக்கத்தில் மோதியிருந்ததைக் காண முடிந்தது. பச்சை நிறப் பேருந்தின் முன்பக்கக் கதவு நசுங்கியிருந்தது. குடிமைத் தற்காப்புப் படையின் இரண்டு ஆம்புலன்ஸ் வாகனங்களும் அங்கு காணப்பட்டன.

இந்நிலையில் ஊடகத்துக்கு விளக்கமளித்த டவர் டிரான்சிட் பேச்சாளர் ஒருவர், பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிப்பதாகவும் கவனத்துடன் ஓட்ட ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

“பாதுகாப்பு குறித்து ஓட்டுநர்களுக்கு நினைவூட்டுவதற்காக எங்களுடைய குழுவினர் களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்,” என்று அந்தப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

கடந்த மூன்று நாள்களில் டவர் டிரான்சிட் பேருந்து தொடர்பான இரண்டு விபத்துகள் நிகழ்ந்துள்ளன.

தெம்பனிஸ் விரைவுச்சாலையில் ஜூன் 8 நிகழ்ந்த லாரி-டவர் டிரான்சிட் பேருந்து விபத்தில் இரண்டு பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

ஜூன் 6ஆம் தேதி, சிம் லிம் டவர் அருகே டவர் டிரான்சிட் பேருந்து, டிரக் மோதிய விபத்தில் 93 வயது முதியவர் உட்பட நான்கு பயணிகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

குறிப்புச் சொற்கள்