தோ பாயோ வட்டாரத்தில் பெரிய மரம் ஒன்று சாலை நடுவில் விழுந்ததால் மூன்று பேருந்துச் சேவைகள் பாதை மாற்றி விடப்பட்டன.
அச்சம்பவம் வியாழக்கிழமையன்று (நவம்பர் 28) நிகழ்ந்தது. பேருந்துச் சேவைகள் 56, 105, 153 ஆகியவை தோ பாயோ சென்ட்ரலிலிருந்து லோரோங் 4 தோ பாயோவை நோக்கி மாற்றி விடப்பட்டதாக இரவு 8.45 மணியளவில் எக்ஸ் சமூக ஊடகத் தளத்தில் தெரிவிக்கப்பட்டது. அதன் காரணமாக சம்பந்தப்பட்ட பேருந்துச் சேவைகள், இரண்டு பேருந்து நிறுத்தங்களில் நிறுத்த முடியாமல் போனது.
லோரோங் 2 தோ பாயோவையடுத்து தோ பாயோ சென்ட்ரல் பகுதி மூடப்பட்டிருந்ததாக நிலப் போக்குவரத்து ஆணையம் எக்சில் தெரிவித்திருந்தது.
சுமார் ஒரு மணிநேரத்துக்குப் பிறகு பாதிக்கப்பட்ட பேருந்துச் சேவைகள் இயல்புநிலைக்குத் திரும்பியதாக எஸ்பிஎஸ் டிரான்சிட் கூறியது. விழுந்த மரத்தின் ஒரு பகுதி அகற்றப்பட்டதைத் தொடர்ந்து இரவு சுமார் 10 மணிக்கு சம்பந்தப்பட்ட பகுதியில் வாகனங்கள் போக முடிந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

