தேசிய தினத்துக்கு முதல் நாளான ஆகஸ்ட் மாதம் எட்டாம் தேதி பேருந்து, ரயில் சேவை நேரம் நீட்டிக்கப்படுகிறது.
பெரும்பாலான எம்ஆர்டி ரயில் சேவைகள், 53 பேருந்துச் சேவைகள் ஆகியவை அன்றைய நாள் கூடுதல் நேரம் இயங்கும் என்று எஸ்எம்ஆர்டி, எஸ்பிஎஸ் டிரான்சிட் ஆகிய இரண்டும் திங்கட்கிழமை (ஜூலை 27) தனித்தனி அறிக்கைகள் மூலம் தெரிவித்தன.
ரயில் சேவைகள்
வடக்கு-தெற்கு ரயில் பாதையில் ஆகஸ்ட் எட்டாம் தேதி நகர மண்டபம் (City Hall) நிலையத்திலிருந்து ஜூரோங் ஈஸ்ட், மரினா சவுத் பியர் ஆகிய நிலையங்களை நோக்கிய கடைசி ரயில் சேவைகள் ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி அதிகாலை 12.30 மணிக்குப் புறப்படும்.
கிழக்கு-மேற்கு ரயில் பாதையில் நகர மண்டபத்திலிருந்து பாசிர் ரிஸ், துவாஸ் லிங்க் ஆகியவற்றுக்குப் புறப்படும் கடைசி ரயில் சேவைகளும் அதே நேரத்தில் புறப்படும்.
வட்ட ரயில் பாதையில் மரினா பே நிலையத்திலிருந்து ஹார்பர்ஃபிரண்ட் நிலையத்துக்குப் புறப்படும் கடைசிச் சேவை எட்டாம் தேதி இரவு 11.57 மணிக்குக் கிளம்பும். எதிர்த் திசையில் கடைசி சேவை இரவு 11.30 மணிக்குப் புறப்படும்.
தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் பாதையில் பேஷோர் நிலையத்தை நோக்கிய கடைசி ரயில் சேவை உட்லண்ட்ஸ் நார்த்திலிருந்து எட்டாம் தேதி நள்ளிரவு 12 மணிக்குப் புறப்படும். எதிர்த் திசையில் கடைசிச் சேவை ஒன்பதாம் தேதி அதிகாலை 12.12 மணிக்குக் கிளம்பும்.
வடகிழக்குப் பாதையில் பொங்கோல் கோஸ்ட் நிலையத்தை நோக்கிய கடைசி ரயில் சேவை ஹார்பர்ஃபிரண்ட் நிலையத்திலிருந்து ஒன்பதாம் தேதி அதிகாலை 12.30 மணிக்குப் புறப்படும். எதிர்த் திசையில் கடைசி சேவை எட்டாம் தேதி நள்ளிரவு புறப்படும்.
டெளன்டவுன் பாதையில் எக்ஸ்போ நிலையத்தை நோக்கிய கடைசி ரயில் சேவை புக்கிட் பாஞ்சாங் நிலையத்திலிருந்து ஒன்பதாம் தேதி அதிகாலை 12.03 மணிக்குக் கிளம்பும். அதேபோல், எக்ஸ்போ நிலையத்திலிருந்து கடைசிச் சேவை அதிகாலை 12.04 மணிக்குப் புறப்படும்.
இலகு ரயில், பேருந்துச் சேவைகள்
சில இலகு ரயில் சேவைகளின் (எல்ஆர்டி) நேரமும் நீட்டிக்கப்படுகிறது.
இவற்றோடு பிடோக், பீஷான், கிளமென்டி, பூன் லே, புவாங்கொக், பாசிர் ரிஸ், செம்பவாங் உள்ளிட்ட முனையங்களிலிருந்து புறப்படும் 53 பேருந்துச் சேவைகளின் நேரமும் நீட்டிக்கப்படுகிறது.
சில பேருந்துகளின் கடைசிச் சேவைகள் ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி அதிகாலை ஒரு மணிக்குப் பிறகு புறப்படும்.

