சிங்கப்பூர் வர்த்தகக் கடன் பிரிவின் வர்த்தக நம்பிக்கைக் குறியீடு மிதமாக உயர்ந்துள்ள நிலையில், இங்குள்ள உள்ளூர் தொழில் நிறுவனங்கள், 2025 முதல் காலாண்டுக்கான வர்த்தக நம்பிக்கையைக் கவனத்துடன் கட்டிக்காத்து வருகின்றன.
திங்கட்கிழமை (டிசம்பர் 16) வெளியிடப்பட்ட தரவைப் பொறுத்தமட்டில், அக்குறியீடு தொடர்ந்து ஆறாவது காலாண்டாக உயர்ந்து, 2025 முதல் காலாண்டுக்கு +5.45 விழுக்காட்டுப் புள்ளிகளை எட்டியது. ஒப்புநோக்க, 2024 நான்காம் காலாண்டில் அது +5.06 விழுக்காட்டுப் புள்ளிகளாகவும் 2024 முதல் காலாண்டில் +4.48 விழுக்காட்டுப் புள்ளிகளாகவும் இருந்தது.
வர்த்தக நம்பிக்கைக் குறியீட்டின் ஆறில் நான்கு குறிகாட்டிகளான (indicators) விற்பனை அளவு, நிகர லாபம், விற்கும் விலை, புதிய கோரிக்கைகள் (orders) ஆகியவை காலாண்டு அடிப்படையில் மேம்பட்டன. அதேவேளையில், மூன்று குறிகாட்டிகளான விற்பனை அளவு, நிகர லாபம், சரக்கு இருப்பு நிலைகள் (inventory levels) ஆகியவை ஆண்டு அடிப்படையில் உயர்ந்தன.
கட்டுமானம், போக்குவரத்து, நிதித் துறைகளுக்கான வர்த்தக நம்பிக்கையே ஆக அதிகமாக இருந்தது. அத்துறைகளில் வர்த்தக நம்பிக்கைக் குறியீட்டின் ஆறில் நான்கு குறிகாட்டிகள் மேம்பட்டன.
குறிப்பிடும்படியாக, கட்டுமானத் துறையில் 2025 முதல் காலாண்டுக்கான சரக்கு இருப்பு நிலை, பூஜ்ய விழுக்காட்டுப் புள்ளியாகக் குறைந்தது. 2024 நான்காம் காலாண்டில் அது +7.69 விழுக்காட்டுப் புள்ளிகளாக இருந்தது.
போக்குவரத்து (+16.67 விழுக்காட்டுப் புள்ளிகளிலிருந்து +8.44 விழுக்காட்டுப் புள்ளிகளாக) நிதி (+7.14 விழுக்காட்டுப் புள்ளிகளிலிருந்து 0 விழுக்காட்டுப் புள்ளியாக) துறைகளுக்கான விற்பனை விலை குறிகாட்டியும் மிதமடைந்தது.
உற்பத்தித் துறையில் ஒட்டுமொத்த வர்த்தக நம்பிக்கை குறிப்பிடும்படியாக மேம்பட்டதை வர்த்தகக் கடன்பற்று நிர்வாக அமைப்பு கோடிட்டுக் காட்டியது. அத்துறையில் ஆறில் ஐந்து குறிகாட்டிகள் மேம்பட்டன.
மற்றொரு புறம், 2025 முதல் காலாண்டுக்கான மொத்த விற்பனைத் துறையின் வர்த்தக நம்பிக்கை சற்றே மிதமடைந்தது. அத்துறையில் ஆறில் இரண்டு குறிகாட்டிகள் மேம்பட்டன.

