தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

லாரிகளில் ஊழியர்களை ஏற்றிச்செல்ல தடைவிதிக்குமுன் ‘கவனமாகப் பரிசீலனை’ செய்யுமாறு அரசாங்கத்திற்குக் கோரிக்கை

3 mins read
45af926b-60bb-4a1a-813b-bc1f62256374
ஊழியர்களின் போக்குவரத்தில் ‘உண்மையான, நடைமுறைச் சிக்கல்கள்’ இருப்பதாக இருபதுக்கும் மேற்பட்ட தொழில் அமைப்புகளின் கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது. - கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஊழியர்களை லாரிகளில் ஏற்றிச்செல்லும் நடைமுறையை மாற்றுவதாக இருந்தால் ‘கவனமாகப் பரிசீலனை’ செய்யும்படி இருபதுக்கும் மேற்பட்ட தொழில் அமைப்புகள் செவ்வாய்க்கிழமை கூட்டறிக்கை வெளியிட்டன.

ஊழியர்களின் போக்குவரத்தில் ‘உண்மையான, நடைமுறைச் சிக்கல்கள்’ இருப்பதாக அரசாங்கத்திடம் அவை எடுத்துரைத்தன.

ஜூலை 18, 19 தேதிகளில் லாரிகள் சம்பந்தப்பட்ட சாலை விபத்துகளில், வெளிநாட்டு ஊழியர்கள் உட்பட 37 பேர் காயமடைந்ததால், பாதுகாப்புத் தரங்களை மேம்படுத்துமாறு பல்வேறு அமைப்புகள் மீண்டும் அழைப்பு விடுத்தன. அதனைத் தொடர்ந்து இந்தக் கூட்டறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

சிறிய, நடுத்தர நிறுவனங்கள் சங்கம் உள்ளிட்ட 11 சங்கங்கள், நிறுவனங்கள், சிங்கப்பூர் சிறப்பு வர்த்தகக் கூட்டணியின்கீழ் இடம்பெறும் 13 அமைப்புகள் ஆகியவற்றின் சார்பில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.

பிரதமர் லீ சியன் லூங், இடைக்காலப் போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட், போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் ஏமி கோர் ஆகியோருக்கு இந்தக் கூட்டறிக்கை கடிதமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பெரிய நிறுவனங்கள் ‘பலவும்’ ஊழியர்களை ஏற்றிச்செல்வதற்கு லாரிகளைப் பயன்படுத்துவதை நிறுத்தியிருந்தாலும், பெரும்பாலான சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு இவ்விவகாரம் ‘பொறுப்பான, கவனமான முறையில் பல்வேறு தரப்பினருடன் கலந்தாலோசிக்கப்படவேண்டிய ஒன்று’ என்று அமைப்புகள் குறிப்பிட்டன.

இந்த நடைமுறைக்குத் தடை விதிப்பதுபோன்ற மாற்றங்கள் தங்களுக்கு ‘மிகுந்த அக்கறைக்குரியவை’ என்றும் அவை குறிப்பிட்டன.

“காலங்காலமாக இந்த நடைமுறையைச் சார்ந்திருக்கும் தொழில்துறைகள் நடைமுறை மாற்றங்களால் பெரிதும் பாதிக்கப்படக்கூடும். இதனால் பணிகள் தாமதமடைந்து, இந்தத் தொழில்துறைகளைச் சார்ந்துள்ள ஊழியர்களின் வாழ்வாதாரமும் ஆபத்துக்குள்ளாகும்,” என்று அமைப்புகள் கூறின.

செலவு பற்றிய கவலைகள் ஒருபுறமிருக்க, ‘உண்மையான, நடைமுறைச் சிக்கல்கள்’ இருப்பதாகவும் அவை கூறின.

மேலும், ஊழியர்களுக்காகப் பாதுகாப்பான போக்குவரத்துக்கு மாறும்போது ‘சமூக இணக்கத்தில் ஒரு மாற்றத்தை ஏற்க’ சமுதாயமும் தயாராக இருக்கவேண்டும் என்று சுட்டிக்காட்டப்பட்டது.

“ஊழியர்கள் பொதுப் போக்குவரத்து உள்ளிட்ட மற்ற வகையான போக்குவரத்துகளுக்கு மாறும்போது, சிங்கப்பூர் குடிமக்கள் பயணம் செய்வதற்குப் பயன்படுத்தும் தற்போதைய உள்கட்டமைப்புகளில் அதிக போக்குவரத்து நெரிசல், பயணிகள் நெரிசல், தாமதங்கள் போன்ற சவால்கள் எழக்கூடும்,” என்று அறிக்கை குறிப்பிட்டது.

“ஊழியர்களின் பாதுகாப்புக்கு அவசரத் தீர்வுகாண்பதை” தாங்கள் வரவேற்பதாகவும், “பயன்மிக்கத் தீர்வுகளைக் கண்டறிவதில் உறுதி” கொண்டிருப்பதாகவும் கூறப்பட்டது.

ஜூலை மாதம் நடந்த இரு விபத்துகளுக்குப் பிறகு, ஊழியர்களுக்குப் பாதுகாப்பான போக்குவரத்து தேவை என வலியுறுத்திய இரு அறிக்கைகள் தனித்தனியாக வெளியிடப்பட்டன.

சென்ற வாரம், 40க்கும் மேற்பட்ட அமைப்புகள், தனிநபர்கள், முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டாக வெளியிட்ட அறிக்கை, லாரிகளில் ஊழியர்களை ஏற்றிச் செல்வதற்குத் தடை விதிக்க ஒரு காலகட்டத்தை நிர்ணயிக்குமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டது. அதோடு, வாகனங்களில் இருக்கைகளும் இருக்கை வார்களும் கட்டாயமாக்கப்படவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தது.

இரு நாள்களுக்குப் பிறகு, 53 கையொப்பங்களுடன் சமூக அமைப்புகள், குடிமை அமைப்புகள் கூட்டாக வெளியிட்ட இரண்டாவது அறிக்கை, லாரிகளில் ஊழியர்களை ஏற்றிச் செல்வதற்கு உடனடியாகத் தடை விதிக்குமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டது. பாதுகாப்பான பயண முறைக்கு மாறுவதில் சவால்களை எதிர்நோக்கக்கூடிய நிறுவனங்களுக்கு ஆதரவுத் திட்டம் ஒன்றைத் தொடங்குமாறும் போக்குவரத்து அமைச்சிடம் கேட்டுக்கொண்டது.

புதன்கிழமை நடைபெறவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத்தில், இந்த விவகாரத்தின்பேரில் நீ சூன் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் லூயிஸ் இங் இரு கேள்விகளைத் தாக்கல் செய்யவுள்ளார்.

குறிப்புச் சொற்கள்