வாகனமற்ற நாளில் வர்த்தக ஊக்குவிப்பு: ஜூ சியாட் கடைக்காரர்கள் முயற்சி

வாகனமற்ற நாளில் வர்த்தக ஊக்குவிப்பு: ஜூ சியாட் கடைக்காரர்கள் முயற்சி

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

20 Sep 2026 - 1:14 pm

2 mins read

ஜூசியாட் வட்டாரம் வண்ணமயமான கடைவீடுகளோடு நின்றுவிடவில்லை, அங்கு இன்னும் பல சிறப்பம்சங்கள் நிரம்பிக் கிடக்கின்றன என்பதை வெளிப்படுத்த அங்குள்ள வர்த்தர்கள் விரும்புகின்றனர்.

கடைக்குள்ளேயே முடங்கிக் கிடக்காமல் வெளியில் வந்து வாடிக்கையாளர்களுடன் கலந்துரையாட ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சிறப்புகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவர வர்த்தகர்களை உள்ளடக்கிய குழு ஒன்று கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

அக்டோபர் 3ஆம் தேதி கடைப்பிடிக்கப்படும் நிலப் போக்குவரத்து ஆணையத்தின் ‘உலக வாகனங்கள் இல்லா நாள்’ நிகழ்வின் ஒரு பகுதியே அந்த முயற்சிகள்.

அன்றைய தினம் டன்மன் ரோடு, ஈஸ்ட் கோஸ்ட் ரோடு ஆகியவற்றுக்கு இடைப்பட்ட பகுதியில் வாகனப் போக்குவரத்து இருக்காது.

ஜூ சியாட் வட்டாரத்தின் மையப் பகுதியில் குத்துச்சண்டை போட்டிகள் மற்றும் இலவசப் பயிற்சிகளை வழங்கும் குத்துச்சண்டை அரங்கம் அமைக்கப்படும்.

மேலும், தெருவோர யோகாசனப் பயிற்சிகள் போன்ற இடைவிடாத சுகாதாரம் சார்ந்த செயல்பாடுகளுடன் செல்லப்பிராணிகளுக்கான இலவசப் பரிசோதனை, சிறப்பு காப்பி மற்றும் ‘கிராஃப்ட் பீர்’ வகைகளைச் சுவைக்கக்கூடிய ‘கஃபே மற்றும் பார்’ உலா போன்றவையும் இடம்பெறும்.

530 மீட்டர் நீளமுள்ள ஜூ சியாட் ரோட்டில் ‘ஜூ சியாட் ஸ்த்ரீட் சோஷியல்’ எனும் இந்த முதல் நிகழ்வு, வாகனங்கள் இல்லாத நாளான அக்டோபர் 3ஆம் தேதி பிற்பகல் 3.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை நடத்தப்படும். அந்த வட்டாரத்தின் சாலைகளிலும் தெருக்களிலும் கடை நடத்தும் 90க்கும் மேற்பட்ட வர்த்தகர்கள் அங்குத் தற்காலிகக் கடைகளை ஏற்படுத்துவர்.

காத்தோங்-ஜூ சியாட் வர்த்தகர் சங்கத்தின் தலைவர் எட்மண்ட் வோங் இதுபற்றிக் கூறுகையில், “இது ஒருமுறை மட்டுமே நடைபெறும் நிகழ்வாக இருக்காது. இதுபோன்ற நிகழ்வுகளை தொடர்ந்து நடத்த விரும்புகிறோம்.

“இருப்பினும், அதற்கான நிகழ்ச்சிநிரலைத் தீர்மானிப்பதற்கு முன், பொதுமக்களின் கருத்துகளைக் கேட்டுத் தெரிந்துகொள்ள விரும்புகிறோம்,” என்றார்.

வழக்கமாகக் கடந்து செல்லும் இடங்களுக்குள் பார்வையாளர்களை அழைத்துச் செல்வதும் எதிர்காலத்தில் மீண்டும் அங்கு வர அவர்களை ஊக்குவிப்பதும் நிகழ்ச்சியின் நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்
ஜூ சியாட்வர்த்தகம்வாகனம்