இவ்வாண்டு பொருளியல் வளர்ச்சி சவால்கள் நிறைந்த ஒன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, தொழில் நிறுவனங்கள் துடிப்புடனும் மீள்திறனுடனும் இருப்பது அவசியம் என்று துணைப் பிரதமரும் வர்த்தக, தொழில் அமைச்சருமான கான் கிம் யோங் கூறியுள்ளார்.
சீனப் புத்தாண்டு நிகழ்ச்சி ஒன்றில் புதன்கிழமை (ஜனவரி 29ஆம் தேதி) பேசிய அமைச்சர், வர்த்தகம் தொடர்பான புதிய அமெரிக்க அரசு நிர்வாகத்தின் நிலைப்பாடு நிச்சயமற்றதன்மையை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார். இதனால், வர்த்தகச் சூழல் பதற்றமடையும் அபாயம் அதிகரித்துள்ளதாக அவர் விளக்கினார்.
“இது சிங்கப்பூரின் உற்பத்தி, வர்த்தகம் தொடர்பான சேவைத் துறையை பாதிப்பதுடன் பொருள்களின் விலைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்’” என்று அவர் சொன்னார்.
புதிய அமெரிக்க அதிபராக ஜனவரி 20ஆம் தேதி பொறுப்பேற்றுள்ள டோனல்ட் டிரம்ப் சிறிய வர்த்தக நாடுகளின் பொருள்கள் மீதான வரிவிதிப்பை 20 விழுக்காடு உயர்த்தப்போவதாக அறிவித்திருப்பது இங்கு நினைவுகூரத்தக்கது.
இவ்வாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 1லிருந்து 3 விழுக்காடு வரை மெதுவடையக்கூடும் என்றும் துணைப் பிரதமர் கான் கிம் யோங் கூறினார். மூலாதாரப் பணவீக்கம் 1லிருந்து 2 விழுக்காடுவரை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் திரு கான் கூறினார்.
இந்தச் சவால்களை எதிர்கொள்ள நிறுவனங்களுக்கு தன்னம்பிக்கை தேவை என்று அவர் வலியுறுத்தினார்.
சீன வர்த்தக, தொழில்சபை ஹில் ஸ்திரீட்டில் உள்ள தனது கட்டடத்தில் சீனப் புத்தாண்டு வரவேற்பை கொண்டாடிய நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு கான், நிறுவனங்கள் துடிப்புடன் விளங்கி இவ்வட்டாரத்தில் கிடைக்கக்கூடிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
தொடர்ந்து பேசிய அவர், “ஆசியப் பொருளியல் உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட 50 விழுக்காடுவரை உள்ளது. இதுவே 2030ஆம் ஆண்டு, 60 விழுக்காடுவரை வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,” என்று கூறினார்.