நிறுவனங்கள் 2031 ஏப்ரலுக்குள் ‘இன்வாய்ஸ்நவ்’ வழியாக விலைப்பட்டியலை அனுப்புவது கட்டாயம்

நிறுவனங்கள் 2031 ஏப்ரலுக்குள் ‘இன்வாய்ஸ்நவ்’ வழியாக விலைப்பட்டியலை அனுப்புவது கட்டாயம்

2 mins read
2c6c7ab1-8ea6-45e3-8fa2-739c0058b800
மத்திய வர்த்தக வட்டாரத்தில் ஜூப்லி பாலத்திற்கு அருகே நடமாடும் மக்கள். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பொருள், சேவை வரியைப் (GST) பெறும் வர்த்தகங்கள் மின்னிலக்க விலைப்பட்டியல்களை உள்நாட்டு வருவாய் ஆணையத்திற்கு (ஐராஸ்) ‘இன்வாய்ஸ்நவ்’ (InvoiceNow) தளம் வழியாக அனுப்ப வேண்டும்.

2031ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் இந்த விதிமுறை முழுமையாகச் செயல்படுத்தப்படும். இதன்வழியாகக் கூடுதலாக 90,000 வர்த்தகங்கள் கட்டமைப்புக்குள் கொண்டுவரப்படும் என நிதித் துறை மூத்த துணையமைச்சர் ஜெஃப்ரி சியாவ் தெரிவித்துள்ளார்.

2019இல் தொடங்கப்பட்ட இன்வாய்ஸ்நவ், தற்போது 63,000க்கும் அதிகமான வர்த்தகங்களால் பயன்படுத்தப்படுகிறது. மேலும் கூடுதலான வர்த்தகங்கள் கட்டமைப்பில் சேரும்போது அவற்றின் செயல்திறனும் அதிகரிக்கும் எனத் திரு சியாவ் தெரிவித்தார்.

“இன்வாய்ஸ்நவ் வழியாக வர்த்தகர்கள் சுயமாக மின்னிலக்க விலைப்பட்டியல்களை வெளியிடலாம். விவரங்களைக் கைப்பட உள்ளீடு செய்வதற்கான அவசியமின்றி வர்த்தகங்கள் தன்னிச்சையாக மின்னிலக்கப் பட்டியல்களை வெளியிடலாம்,” என்று அவர் கூறினார்.

விலைப்பட்டியல்களில் ஏற்படும் தவறுகளை இந்தப் புதிய முறை குறைத்திருப்பதாகத் திரு சியாவ் கூறினார்.

எளிதாகும் வெளிநாட்டு வர்த்தகப் பரிவர்த்தனைகள்

வெளிநாட்டுச் செயல்பாடுகளைக் கொண்ட வர்த்தகங்களுக்கு, எல்லை தாண்டிய பரிவர்த்தனைகளை இன்வாய்ஸ்நவ் எளிதாக்குகிறது என்றும் தெரிவிக்கப்பட்டது.

“எடுத்துக்காட்டாக, புதிதாகப் பதிவுசெய்யப்பட்ட வர்த்தகங்களுக்கு நாங்கள் ஓராண்டுக்குள் இலவச இன்வாய்ஸ் சேவைகளை வழங்குகிறோம்.

“சிங்கப்பூர் வர்த்தகச் சம்மேளனத்துடனும் (SBF) மற்ற வர்த்தகச் சங்கங்களுடனும் கலந்தாலோசித்த பிறகு, மின்னிலக்க விலைப்பட்டியல் முறையின் பரவலான பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கான அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்க நாங்கள் இப்போது தயாராக உள்ளோம்,” என்றார் திரு சியாவ்.

இந்தத் திட்டத்தில் வர்த்தகங்களை இணைக்கும் பணி, சிறிய வர்த்தகங்களின் மாற்றத்திற்குச் சிறந்த முறையில் ஆதரவளிக்கும் வகையில் அவற்றுக்கு முன்னுரிமை தந்து படிப்படியாக மேற்கொள்ளப்படும்.

அமைச்சு, வர்த்தகங்களுக்கு ‘இன்வாய்ஸ்நவ்’ பயன்பாட்டிற்குத் தயாராக உள்ள மென்பொருள் தீர்வுகளின் தொகுப்பை இலவசமாக வழங்கும்.

மின்னிலக்கமயமாக்கல் மூலம் வர்த்தகம் செய்வதற்கான செலவைக் குறைக்கும் அரசாங்கத்தின் முயற்சிகளில் இந்த நடவடிக்கையும் ஒரு பகுதியாகும்.

குறிப்புச் சொற்கள்