ஆகஸ்ட்டில் புதிய தனியார் வீடுகளின் விற்பனை 72.1% வீழ்ச்சி

ஆகஸ்ட்டில் புதிய தனியார் வீடுகளின் விற்பனை 72.1% வீழ்ச்சி

1 mins read
0e456240-6c2d-4d30-98ca-d23b597e3ebc
2022ஆம் ஆண்டின் பிற்பாதியில் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டதை அடுத்து, வீடு வாங்குவோரிடையே கட்டுப்படியாகும் வீட்டு விலை தொடர்பான கவலை அதிகரித்து வருகிறது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் ஆகஸ்ட் மாதம், புதிய தனியார் வீடுகளின் விற்பனை 72.1 விழுக்காடு வீழ்ச்சி கண்டது.

அண்மைய மாதங்களில் அதிகமான புதிய தனியார் வீடுகள் விற்பனைக்கு வந்ததும் ஆகஸ்ட் மாத நடுப்பகுதியில் சீன நாள்காட்டியின்படி ‘ஹங்ரி கோஸ்ட்’ மாதம் தொடங்கியதும் இதற்குக் காரணங்களாகக் கருதப்படுகின்றன.

ஆகஸ்ட்டில் 394 தனியார் வீடுகள் விற்பனையாயின. ஜூலையில் அந்த எண்ணிக்கை 1,412ஆக இருந்தது. அது, 20 மாதங்களில் ஆக அதிக எண்ணிக்கை எனக் கூறப்பட்டது.

அதிகமான வட்டி விகிதம், தனியார் வீட்டு விலையைச் சீராக்க மூன்றுமுறை அறிவிக்கப்பட்ட சொத்துத் தணிப்பு நடவடிக்கைகள், கவலை தரும் பொருளியல் எதிர்பார்ப்புகள் ஆகியவற்றால் வீடு வாங்குவோர் கவனமாகச் செயல்படுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஆகஸ்ட் மாதம் விற்கப்பட்ட தனியார் வீடுகளில் 68 விழுக்காட்டு வீடுகள், ‘ஹங்ரி கோஸ்ட்’ மாதம் தொடங்குவதற்குமுன் விற்கப்பட்டவை.

ஆகஸ்ட்டில் விற்பனைக்கு அறிவிக்கப்பட்ட புதிய தனியார் வீடுகளின் எண்ணிக்கையும் 72.6 விழுக்காடு குறைந்து 590ஆக இருந்தது. ஒப்புநோக்க ஜூலையில் இத்தகைய 2,156 வீடுகள் விற்பனைக்கு விடப்பட்டன. இருப்பினும் ஓராண்டுக்கு முன்பிருந்த நிலையுடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்க 340 விழுக்காடு அதிகம் என்று நகர மறுசீரமைப்பு ஆணையம் தெரிவித்தது.

‘இசி’ எனப்படும் எக்சகியூட்டிவ் கூட்டுரிமை வீடுகளின் விற்பனை ஆகஸ்ட் மாதத்தில் புதிய தனியார் வீட்டு விற்பனையைவிடச் சற்றே கூடுதலாக இருந்ததாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்