உரிய நேரத்தில் அமைச்சரவை அறிவிக்கப்படும்: பிரதமர் வோங்

1 mins read
1c500f70-b533-489e-bcd2-1c627379dd30
தமது உடனடிப் பணி அமைச்சரவையை அமைப்பதுதான் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரர்கள் யாருக்கு வாக்களித்திருந்தாலும், அவர்கள் அனைவர்க்கும் பாகுபாடின்றி மக்கள் செயல் கட்சி சேவையாற்றும் என்றும் தமது குழு உடனே பணியைத் தொடங்கும் என்றும் பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.

“என்னுடைய உடனடிப் பணி அமைச்சரவையை அமைப்பதுதான். தேர்தலில் வென்ற எனது முக்கிய அணியினர் அனைவர்க்கும் சிங்கப்பூரர்களுக்கும் நன்றிக்கடன்பட்டுள்ளேன். அமைச்சரவைப் பட்டியல் தயாரானதும் அதுகுறித்து அறிவிப்பேன்,” என்று திரு வோங் கூறியுள்ளார்.

செய்தியாளர் சந்திப்பில் பிரதமருடன் பங்கேற்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மற்ற மசெக வேட்பாளர்களும் அவரது அமைச்சரவையில் இடம்பெறுவார்களா என்று செய்தியாளர் ஒருவர் கேட்டார்.

அதற்கு, “எனது குழுவில் இடம்பெற்றுள்ள அனைவருமே மிக முக்கியப் பங்காற்றுவர்,” என்று பதிலளித்தார்.

துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட், தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் போன்ற மூத்த அமைச்சர்கள் ஓய்வை அறிவித்துவிட்டனர்.

இந்நிலையில், அமைச்சரவைப் பட்டியல் குறித்த கேள்விகளுக்கு உரிய நேரத்தில் விடையளிக்கப்படும் என்று திரு வோங் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்