சிங்கப்பூரின் கடல் பகுதிகளில் இரண்டு திரவ இயற்கை எரிவாயு மிதவைச் சேமிப்புக் கிடங்குகளை இயக்கச் சிங்கப்பூர்க் கடல்துறை, துறைமுக ஆணையம் விண்ணப்பங்களை வரவேற்கிறது.
தற்போது உரிமம் பெற்றவர்கள், தங்களுக்குத் தேவையான சேமிப்பு, செயல்பாட்டு நிபுணத்துவத்தை வழங்க மூன்றாம் தரப்பு முனையங்களை நடத்துபவர்களுடன் கூட்டுச் சேரலாம் என்று ஆணையம் தெரிவித்தது.
வியாழக்கிழமை (நவம்பர் 12) வெளியிட்ட அறிக்கையில் அதனை ஆணையம் தெரிவித்தது.
மிதவைச் சேமிப்புக் கிடங்குகளின் சேமிப்புக் கொள்ளளவில் பெரும்பாலானவை கப்பல்களுக்கான திரவ இயற்கை எரிவாயு விநியோகத்திற்கு ஒதுக்கப்பட வேண்டும்.
அதேபோல் மற்ற விநியோகஸ்தர்களுக்கும் குறைந்தபட்சக் கொள்ளளவு வழங்கப்பட வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் குறைந்தது 130,000 கன மீட்டர் சேமிப்புக் கொள்ளளவு கொண்ட ஒரு மிதவைச் சேமிப்புக் கிடங்கைச் சொந்தமாகக் கொண்டிருக்கவோ குத்தகைக்கு எடுத்திருக்கவோ வேண்டும்.
அந்தச் சேமிப்புக் கிடங்கு சிங்கப்பூர்க் கப்பல் பதிவகத்தில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆணையத்தின் பாதுகாப்பு, செயல்பாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
மேலும், இந்த மிதவைச் சேமிப்புக் கிடங்கு ஐரோப்பிய ஒன்றிய அனைத்துலக நீடித்த நிலைத்தன்மை, கரியமிலச் சான்றிதழ் கட்டமைப்பின்கீழ் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
அனைத்துலகக் கப்பல் துறையின் கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைக்கும் முயற்சிகளுக்கு இது ஆதரவளிக்கும்.
உரிமங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நிறுவனங்களுக்காக டிசம்பர் 4ஆம் தேதி ஆணையம் ஒரு விளக்கக்கூட்டத்தை நடத்தும். விண்ணப்பங்கள் 2027 பிப்ரவரி 4ஆம் தேதி முடிவடையும்.
