அமைதியும் விவேகமும் வன்முறையை வெல்லட்டும். சிங்கப்பூரில் நாம் அமைதியாகவும் ஒற்றுமையுடனும் இருப்போம்; அதேவேளையில் உலகில் தொடர் வன்முறைகளால் துயறுருவோரைப் பிரார்த்தனையில் நினைவுகூர்வோம் என்று முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சர் முஹம்மது ஃபைஷால் இப்ராஹிம் கூறியிருக்கிறார்.
வரலாற்றுச் சிறப்புமிக்க தேசிய நினைவுச்சின்னமான ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் முதல் ரமலான் வாழ்த்துரையை வழங்குவது பெருமைமிகு தருணம் என்று கூறிய திரு ஃபைஷால், 1820களில் கட்டியெழுப்பப்பட்ட இந்தப் பள்ளிவாசல், கிட்டத்தட்ட 200 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சூலியா முஸ்லிம் முன்னோடிகளின் தியாகத்திற்கும் பங்களிப்பிற்கும் சான்றாகத் திகழ்வதாகப் புகழாரம் சூட்டினார்.
சூலியா முஸ்லிம்கள் சிங்கப்பூரின் முன்னோடித் தமிழ் முஸ்லிம்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைமுறைகள் தாண்டியும் நிற்கும் சமூகத்திற்கான அர்ப்பணிப்பு
“பிளவுற்று நிற்கும் இந்த உலகில் வழிபாட்டுத் தலத்தை மட்டும் அவர்கள் உருவாக்கவில்லை. சேவை மனப்பான்மையையும் சமூகத்தின் மீதான ஆழ்ந்த அர்ப்பணிப்பையும் விட்டுச்சென்றுள்ளனர். நேர்மையுடன் பங்களிப்பதும் அடுத்த தலைமுறையினர்க்கு சிறந்த மரபை விட்டுச்செல்வதும் நம் பொறுப்பு என்பதையும் அவர்களது மரபு நினைவூட்டுகிறது,’’ என்றார் உள்துறை மூத்த துணை அமைச்சருமான ஃபைஷால்.
இதனை கட்டிக்காக்க ஒருவழி, நம் தேசத்தின் சமய நல்லிணக்கத்தைப் பேணிக் காப்பதே என்றார் அவர்.
“பிற சமய ஆலயங்களுக்கு நடுவே நிற்கும் ஜாமிஆ சூலியா பள்ளிவாசல் பல்வேறு சமயங்களுக்கிடையே நிலவும் நல்லிணக்கத்தின் வலிமைவாய்ந்த அடையாளம்,” என்று குறிப்பிட்ட திரு ஃபைஷால், “இனம், சமயம் கடந்து அதன் வாயில் எப்போதும் அனைவருக்கும் திறந்திருக்கும். இதுவே ரமலான் கால உணர்வாகும்,’’ என்றும் சொன்னார்.
“நேர்மையுடன் ஒருங்கிணைந்த இலக்குகளுடன் ஒவ்வொருவரும் பங்களிப்புகளை வழங்கினால், ஒன்றுபட்ட உள்ளத்துடன் ஒரே தேசமாக, சமூகமாக முன்னேற இயலும்.
‘‘இந்தப் பண்டிகைக் காலத்தில் நன்றியுணர்வு, பரிவு, ஈகை ஆகிய விழுமியங்களை அடிப்படையாகக் கொண்ட ஒருங்கிணைந்த சமூகத்தை உருவாக்கும் நோக்கத்தில் உறுதியாக இருப்போம்,” என்று கூறிய திரு ஃபைஷால், சக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சார்பாகவும் நோன்புப் பெருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார்.

