சுகாதாரத்துறை ஊழியர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்த அழைப்பு

சுகாதாரத்துறை ஊழியர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்த அழைப்பு

படம்: சாவ்பாவ்

30 Sep 2026 - 7:43 pm

2 mins read

சுகாதாரத்துறை ஊழியர்கள் எதிர்கொள்ளும் புதிய அச்சுறுத்தல்களுக்கு ஏற்ப, அவர்களைப் பாதுகாப்பதற்கான நடைமுறைகள் தொடர்ந்து மேம்படுத்தப்பட வேண்டும் என்று சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு எதிரான வன்முறை, துன்புறுத்தல்களைத் தடுப்பதற்கான முத்தரப்புப் பணிக்குழுவின் இணைத் தலைவரான திரு சுவா ஹோங் சூன் வலியுறுத்தியுள்ளார்.

அடையாளத் திருட்டு மற்றும் இணையவழியில் பின்தொடர்ந்து துன்புறுத்துதல் போன்றவை மருத்துவத் துறை ஊழியர்கள் புதிதாக எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களில் அடங்கும்.

“அடையாளத் திருட்டுச் சம்பவங்கள் அதிகரிக்கும் பட்சத்தில், எந்தெந்தச் சம்பவங்களை உடனடியாக இணையப் பாதுகாப்பு ஆணையத்துக்கு அனுப்ப வேண்டும், எவற்றை முதலில் மருத்துவமனை நிலையிலேயே கையாள வேண்டும் என்பதைக் கண்டறிய ஒரு சிறப்புக் குழுவை அமைக்க வேண்டியிருக்கும்,” என்று திரு சுவா கூறினார்.

கூ டெக் புவாட் மருத்துவமனை, ஈசூன் சமூக மருத்துவமனை ஆகியவற்றின் தலைமை நிர்வாகியுமான திரு சுவா, 2022ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட முத்தரப்புப் பணிக்குழுவின் நிறைவையொட்டி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சுக்கு அளித்த நேர்காணலில் இத்தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

சுகாதார அமைச்சு, சுகாதாரச் சேவை ஊழியர் சங்கம், பொதுச் சுகாதாரக் குழுமங்கள், சமூகப் பராமரிப்புப் பங்காளிகள், தனியார் சுகாதாரப் பராமரிப்பு சேவை வழங்குநர்கள் ஆகிய அமைப்புகளின் பிரதிநிதிகள் இந்தப் பணிக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

வன்முறை மற்றும் துன்புறுத்தல்களுக்குத் தெளிவான வரைவிலக்கணத்தை அளித்து, மருத்துவத் துறை ஊழியர்களைப் பாதுகாப்பதற்கான சீரான தரநிலைகளை உள்ளடக்கிய பொதுக் கட்டமைப்பு 2023ஆம் ஆண்டில் வெளியிடப்படுவதற்கு இந்தப் பணிக்குழுவின் செயல்பாடுகள் முக்கியப் பங்காற்றின.

இருப்பினும், இணையத்தளங்கள் வழி நிகழும் புதிய வடிவங்களிலான துன்புறுத்தல்களிலிருந்து மருத்துவத் துறை ஊழியர்களைப் பாதுகாக்கும் வகையில், இந்த முத்தரப்பு வழிகாட்டி ஆவணத்தில் அவ்வப்போது புதிய நடவடிக்கைகள் சேர்க்கப்பட்டுப் புதுப்பிக்கப்பட வேண்டும் என்று திரு சுவா குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்