கம்போடியாவைத் தளமாகக் கொண்டு செயல்படும் ‘பிரின்ஸ் ஹோல்டிங் குரூப்’ மோசடிக் கும்பலுகும்பலுடன் தொடர்புடைய சிங்கப்பூர்ப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
44 வயதான சென் சியூலிங்மீது வெள்ளிக்கிழமை (நவம்பர் 6) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும் என்று காவல்துறை தெரிவித்தது.
மோசடிக் கும்பல் தொடர்பான விசாரணையில் சியூலிங்குக்குக் கைது ஆணை பிறப்பிக்கப்பட்டதை அடுத்து, அவர் சாங்கி விமான நிலையத்தில் வியாழக்கிழமை (நவம்பர் 5) கைது செய்யப்பட்டார்.
பிரின்ஸ் ஹோல்டிங் குழுமத்தின் நிறுவனரான சென் ஸீக்குச் சொந்தமான பல சிங்கப்பூர் நிறுவனங்களின் இயக்குநராகக் சியூலிங் செயல்பட்டு வந்தார்.
ஸ்கைலைன் இன்வெஸ்ட்மென்ட் மேனேஜ்மென்ட், கேப்பிட்டல் ஸோன் வேர்ஹவுசிங் ஆகிய நிறுவனங்களும் அவற்றில் அடங்கும்.
கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், ஒரு சொத்தின் குத்தகைக்கு விண்ணப்பிக்கையில் ஜேடிசி கார்ப்பரேஷனிடம் தவறான ஒப்பந்தத்தை ஸ்கைலைன் சமர்ப்பித்தது.
மோசடி செய்யும் நோக்கத்துடன் போலி ஆவணத்தைத் தயாரிக்க சியூலிங் அதிகாரிகளைத் தூண்டியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மோசடி குறித்துத் தொடர்ந்து விசாரணை நடப்பதாகக் காவல்துறை கூறியது.
முன்னதாக அக்டோபரில் சியூலிங்குக்குப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டது. அவர் கம்போடியாவிற்குத் தப்பிச் சென்றதாக நம்பப்பட்டது.
சென் ஸீ, பிரின்ஸ் குரூப் ஆகியவற்றுடன் தொடர்புள்ளதால் அமெரிக்கத் தடைகளுக்கு உள்ளான 17 சிங்கப்பூர் நிறுவனங்களுடன் சியூலிங்கிற்குத் தொடர்புள்ளது.
போலியான ஆவணங்களை மாற்றத் தூண்டியதற்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். ஏமாற்ற முயன்ற குற்றத்திற்கும் 10 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையும் அபராதமும் வழங்கப்படலாம்.
பிரின்ஸ் ஹோல்டிங் குழுமம் தொடர்பில் முடக்கப்பட்ட சொத்துகளின் மொத்த மதிப்பு 700 மில்லியன் வெள்ளியைத் தாண்டியுள்ளது.
இதற்கிடையே, இக்குழுமத்துடன் தொடர்புடைய 1.28 பில்லியன் வெள்ளி மதிப்புள்ள சொத்துகளை முடக்கியுள்ளதாகக் கம்போடிய அதிகாரிகள் கடந்த மாதம் அறிவித்தனர்.
அத்துடன் தப்பிச் சென்ற 29 பேரைப் பிடிக்க கம்போடிய அதிகாரிகள் இன்டர்போல் உதவியையும் நாடியுள்ளனர்.
