சாலைகளில் கேமராக்களைப் பொருத்தி வாகன உரிம எண்ணை அடையாளம் காணும் தொழில்நுட்ப முறையையும் கொண்டு மின்னியல் சாலைக் கட்டணத்தைக் (இஆர்பி) கணக்கிடும் முறை சோதனையிடப்பட்டுவருகிறது.
கடந்த 2024ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கிய இந்தச் சோதனை இவ்வாண்டு அக்டோபர் மாதம்வரை தொடரும். தற்போது ஆராய்ச்சிக் கட்டத்தில் இருக்கும் இந்தத் தொழில்நுட்ப முறையைச் செயல்படுத்தத் திட்டமில்லை.
‘இஆர்பி எக்ஸ்’ என்றழைக்கப்படும் புதிய இஆர்பி முறைக்கான சோதனையின் கீழ் ஒன்பது கேமராக்கள் பிராஸ் பசா வட்டாரத்தின் பல்வேறு பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கேமராக்கள் வாகன உரிம எண்களை அடையாளம் காணும், தானியக்க முறையில் திறன்பேசி செயலி ஒன்றின் மூலம் கட்டணங்கள் சம்பந்தப்பட்ட ஓட்டுநர்களிடம் தெரியப்படுத்தப்படும். அரசாங்க தொழில்நுட்ப அமைப்பின் சுயேச்சைப் பிரிவான ஓப்பன் கவர்மென்ட் புரோடக்ட்ஸ் (ஓஜிபி) இச்சோதனையை நடத்திவருகிறது.
தற்போதைய இஆர்பி முறைப்படி வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள வன்பொருளைக் கொண்டு கட்டணம் கணக்கிடப்படுகிறது.
பிராஸ் பசா வட்டாரத்தைக் கவனித்த ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், அங்கு வாகன உரிம எண்களை அடையாளம் காண கேமராக்கள் விளக்குக் கம்பங்களில் பொருத்தப்பட்டிருப்பதை அறிந்தது. வாகனங்களின் பின்புறத்தில் உள்ள எண் பலகை மூலம் இந்த கேமராக்கள் வாகன உரிம எண்களை அடையாளம் காணும்.
இந்த கேமரா இஆர்பி முறையை மேலும் நன்கு அறியும் நோக்கில் கருத்துகளைச் சேகரிக்க இந்தச் சோதனை நடத்தப்படுவதாக ஓஜிபியின் பேச்சாளர் ஒருவர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார். சோதனை தொடர்பில் ஓஜிபி, நிலப் போக்குவரத்து ஆணையத்துடன் இணைந்து செயல்பட்டுவருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பொதுமக்களின் நலனுக்காகத் தொழில்நுட்ப முறைகளை உருவாக்கிவரும் ஓஜிபி, ஆண்டுதோறும் ‘ஹேக்கத்தான்’ எனப்படும் தொழில்நுட்ப, புத்தாக்கத் தீர்வுகளுக்கான இயக்கத்தை நடத்திவருகிறது. அதன் கீழ், சென்ற ஆண்டுக்கான அதன் ஹேக்கத்தான் இயக்கத்தில் இடம்பெற்ற 35 திட்டங்களில் கேமரா இஆர்பி முறையும் ஒன்று.
இம்முறையைப் பெரிய அளவில் செயல்படுத்துவதற்கு முன்பு இன்னும் பெரிய அளவிலான மேம்பாட்டுப் பணிகளும் சோதனைகளும் மேற்கொள்ளப்படவேண்டும் என்று ஓஜிபியின் பேச்சாளர் விவரித்தார்.