கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சிங்கப்பூருக்கு அடுத்த வாரம் வருகை தர உள்ளார். இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை சிங்கப்பூர் பிரதமர் அலுவலகம் புதன்கிழமை வெளியிட்டது.
திரு ட்ரூடோ பிரதமர் லீயை செப்டம்பர் 8ஆம் தேதி சந்திப்பார் எனவும் செப்டம்பர் 7ஆம், 8ஆம் தேதிகளில் அவர் சிங்கப்பூரில் இருப்பார் எனவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
“சிங்கப்பூருக்கும் கனடாவுக்கும் இருக்கும் உறவை வலுப்படுத்துவதே அவருடைய வருகையின் நோக்கம். சிங்கப்பூரில் இருக்கும்போது முதலீடு செய்வதற்குக் கனடா ஒரு சிறந்த இடம் என்பதை நிலைநிறுத்துவதிலும் கனடிய ஏற்றுமதிகளைக் குறித்து எடுத்துரைப்பதிலும் அவர் அதிகக் கவனம் செலுத்துவார்,” என திரு.ட்ரூடோவின் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
கனடியப் பிரதமர் செப்டம்பர் 5ஆம், 6ஆம் தேதிகளில் ஜகார்த்தாவில் நடைபெறும் ஆசியான் உச்சநிலை மாநாட்டில் பங்கேற்பார் எனவும் அதை முடித்துக்கொண்டு அவர் சிங்கப்பூர் வருவார் எனவும் அவ்வறிக்கையில் சொல்லப்பட்டது.
சிங்கப்பூரிலிருந்து அவர் இந்தியாவில் நடைபெறும் ஜி20 உச்சநிலை மாநாட்டில் பங்கேற்பதற்காக புதுடெல்லி செல்வார் எனவும் கூறப்படுகிறது.

