தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

முந்திய பொதுத் தேர்தலைவிட 2025ல் அதிகம் செலவிட்ட வேட்பாளர்கள்

2 mins read
2fa80350-dd2f-4ddd-899f-9735f4ea2c02
இதுவரை தாக்கல் செய்துள்ள செலவுக் கணக்குகளின் அடிப்படையில், பொதுத் தேர்தல் 2025ல் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவர் சராசரியாக $64,959 செலவிட்டுள்ளார். - கோப்புப்படம்: பெரித்தா ஹரியான்

இவ்வாண்டு மே 3ஆம் தேதி நடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தங்களது பிரசாரத்திற்காக $10.7 மில்லியன் செலவிட்டுள்ளனர்.

வேட்பாளர்களில் நான்கில் மூன்று பங்கினர் தேர்தல் துறைக்குத் தங்களது செலவுக் கணக்குகளைத் தாக்கல் செய்துவிட்டனர்.

கடந்த 2020ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் எல்லா வேட்பாளர்களும் ஒட்டுமொத்தத்தில் $9 மில்லியன் செலவிட்டனர்.

முந்தைய தேர்தல்களைப் போலவே, இம்முறையும் ஆக அதிகமாக சுவரொட்டிகள், பதாகைகள், துண்டறிக்கைகள் போன்ற இணையம் சாராப் பிரசாரத்திற்காக $4.75 மில்லியன் செலவிடப்பட்டது.

இணையவழிப் பிரசாரத்திற்கு $2.01 மில்லியனும் தேர்தல் பிரசாரக் கூட்டங்களுக்கு $1.33 மில்லியனும் செலவிடப்பட்டது.

தேர்தலில் போட்டியிட்ட 211 பேரில் 164 பேர் தங்களது செலவுக் கணக்குகளைத் தேர்தல் துறை இணையப்பக்கத்தில் பதிவேற்றம் செய்துவிட்டனர். அதனடிப்படையில், இந்தப் புள்ளிவிவரங்கள் தெரியவந்துள்ளன.

எஞ்சிய 47 பேரும் ஜூன் 16ஆம் தேதிக்குள் தங்களது செலவுக் கணக்குகளைத் தாக்கல் செய்ய வேண்டும்.

குறிப்பாக, பாட்டாளிக் கட்சி வேட்பாளர்கள் எவரது செலவுக் கணக்குகளையும் தேர்தல் துறை இணையத்தளத்தில் காண முடியவில்லை என ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி கூறியது.

இதுவரை தாக்கல் செய்துள்ள செலவுக் கணக்குகளின் அடிப்படையில், வேட்பாளர் ஒருவர் சராசரியாக $64,959 செலவிட்டுள்ளார். 19 வேட்பாளர்கள் தேர்தலுக்காக செலவே செய்யவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.

ஆக அதிகமாக, தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சி வேட்பாளர் ரெனோ ஃபோங் $160,000 செலவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் கட்சி வேட்பாளர் ஒருவர் சராசரியாக $96,667 செலவிட்டுள்ளார். இது, கடந்த பொதுத் தேர்தலைக் காட்டிலும் கிட்டத்தட்ட 30 விழுக்காடு அதிகம்.

தொகுதிவாரியாகப் பார்க்கையில், வெஸ்ட் கோஸ்ட் - ஜூரோங் ஈஸ்ட் குழுத்தொகுதி மசெக வேட்பாளர் அணி $602,708 செலவிட்டுள்ளது. அதில் $290,290 இணையம் சாராப் பிரசாரத்திற்காகச் செலவிடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்