சிங்கப்பூரில் மின்சிகரெட் புகைப்பதை எதிர்கொள்ளும் விதமாக, செப்டம்பர் 1ஆம் தேதி முதல், ‘எட்டோமிடேட்’ விநியோகிப்பாளர்களுக்கு அதிகபட்சமாக 15 பிரம்படிகளும் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம்.
18 வயதுக்குட்பட்டவர்கள் முதல்முறையாக ‘எட்டோமிடேட்’ பயன்படுத்தினால் $500 அபராதமும் பெரியவர்களுக்கு $700 அபராதமும் விதிக்கப்படும். இருதரப்பினருக்கும் தலா $200 அபராதம் உயர்த்தப்படுகிறது.
மேலும், அவர்கள் ஆறு மாதங்கள் வரை கட்டாய மறுவாழ்வுத் திட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும்.
மின்சிகரெட் புகைப்பதை எதிர்கொள்ள அரசாங்கத்தின் முயற்சிகள் குறித்து வியாழக்கிழமை (ஆகஸ்ட் 28) நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது உள்துறை அமைச்சர் கா.சண்முகம், சுகாதார அமைச்சர் ஓங் யி காங், கல்வி அமைச்சர் டெஸ்மண்ட் லீ ஆகியோர் இந்த நடவடிக்கைகளை அறிவித்தனர்.
தேசிய செய்தியாளர் மையத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் மனிதவள துணை அமைச்சர் தினேஷ் வாசு தாசும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சுக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளர் எரிக் சுவாவும் கலந்துகொண்டனர்.
இந்த மேம்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் ஏன் இப்போது அமல்படுத்தப்படுகின்றன என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விக்குப் பதிலளித்த திரு சண்முகம், மின்சிகரெட் புகைப்பது அதிகரித்திருப்பதை அரசாங்கம் கவனித்ததாகத் கூறினார்.
“நிலைமை இன்னும் கட்டுப்பாட்டை மீறவில்லை. ஆனால், இது ஒரு அதிகரித்துவரும் பிரச்சினையாக நாங்கள் கருதுகிறோம். நிலைமை கட்டுப்பாட்டை மீறும்வரை காத்திருக்க நாங்கள் விரும்பவில்லை. அதனால், நாங்கள் விரைந்து செயல்படுகிறோம்,” என்று அவர் விவரித்தார்.
செப்டம்பர் 1ஆம் தேதி முதல், ‘கேபோட்’ அல்லது எட்டோமிடேட் இறக்குமதி செய்பவர்களுக்கு மூன்று முதல் 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் ஐந்து முதல் 15 பிரம்படிகளும் விதிக்கப்படும்.
தொடர்புடைய செய்திகள்
‘கேபோட்’ விநியோகித்ததில் அல்லது விற்பனை செய்ததில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், இரண்டு முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் இரண்டு முதல் ஐந்து பிரம்படிகளும் விதிக்கப்படும்.
ஓர் இடைக்கால நடவடிக்கையாக, தற்போது நச்சுப் பொருள்கள் சட்டத்தின்கீழ் உள்ள மயக்க மருந்தான எட்டோமிடேட், செப்டம்பர் 1 முதல் 2026 பிப்ரவரி 28 வரை போதைப்பொருளைத் தவறாகப் பயன்படுத்துவதற்கு எதிரான சட்டத்தின்கீழ் ‘சி’ பிரிவுப் போதைப்பொருளாக வகைப்படுத்தப்படும். இது, சில மாற்றியமைக்கப்பட்ட எட்டோமிடேட் வகைக்கும் பொருந்தும்.
தேசியப் பாதுகாப்புக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு சண்முகம், எட்டோமிடேட் அல்லது வேறேதேனும் தீங்கு விளைவிக்கும் பொருள்களை மின்சிகரெட் புகைப்பதன் மூலம் எவ்வாறு பயன்படுத்த முடியும் என்பதை ஆய்வுசெய்ய இது ஆறு மாதகால அவகாசம் தருவதாகக் கூறினார்.
சமுதாயக் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு ஓங், மின்சிகரெட் புகைக்கும் நிலை மாறிவிட்டதாகச் சொன்னார்.
இரண்டாவது முறையாக எட்டோமிடேட் பயன்படுத்துபவர்கள் கைதுசெய்யப்பட்டு, ஆறு மாதங்கள் கட்டாயக் கண்காணிப்பு, போதைப்பொருள் சோதனை, மறுவாழ்வு ஆகியவற்றை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதைச் சுட்டிய அவர், தண்டனைகள் கடுமையாக்கப்பட்டுள்ளதை தீவிரமான ஒன்று என வர்ணித்தார்.
பள்ளிகளிலும் உயர் கல்விக் கழகங்களிலும் திடீர் சோதனைகளும் அமலாக்க நடவடிக்கைகளும் ஏற்கெனவே நடத்தப்பட்டுவரும் நிலையில், பள்ளிகளில் கல்வியை மேம்படுத்தி, பெற்றோருக்கான விழிப்புணர்வைக் கல்வி அமைச்சு அதிகரிக்கும் என்று திரு லீ கூறினார்.
“கல்வி அமைச்சு எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து பள்ளிகள் பெற்றோர்க்குத் தெரியப்படுத்தும். பிள்ளைகளுக்கு ஆதரவளிக்க, பெற்றோருடன் இணைந்து செயல்பட்டு திறந்த மனத்துடன் பேசி, பள்ளிகள் நம்பிக்கையைப் பேணிக்காக்கும்,” என்றார் அவர்.

