சிங்கப்பூர்ப் பள்ளிகளில் மாணவர்களைத் திருத்த பயன்படுத்தப்படும் அனைத்து வழிமுறைகளும் போதுமானதாக இல்லாமல்போகும் பட்சத்தில்தான் ஒழுங்கு நடவடிக்கையாகப் பிரம்படி கையாளப்படுகிறது என்று கல்வியமைச்சர் டெஸ்மண்ட் லீ கூறியுள்ளார்.
பிரம்படியைக் கையாளும் பள்ளிகள், மாணவர்களின் நலனைப் பாதுகாக்க கண்டிப்பான விதிமுறைகளைப் பின்பற்றுவது அவசியம் என்று நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (மே 5) திரு லீ குறிப்பிட்டார்.
பள்ளி முதல்வரின் ஒப்புதலைப் பெற்றபின் அங்கீகரிக்கப்பட்ட ஆசிரியரால் மட்டுமே பிரம்படி நிறைவேற்றப்படும் என்றார் அவர்.
பள்ளியில் நிகழும் துன்புறுத்தல் சம்பவங்களுக்குப் பிரம்படி கொடுப்பதுபற்றி நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்த கேள்விகளுக்குத் திரு லீ பதிலளித்தார்.
தவறுசெய்யும் மாணவருக்குப் பிரம்படி கொடுக்கும்முன் அந்த மாணவர் எந்தளவு முதிர்ச்சியுள்ளவராக இருக்கிறார், பிரம்படி அந்த மாணவரின் தவற்றைத் திருத்திக்கொள்ள உதவுமா போன்ற பல அம்சங்களைப் பள்ளி ஆராயும் என்றார் திரு லீ.
பிரம்படியைக் கையாளும் பள்ளிகளுக்கான கண்டிப்பான விதிமுறைகள்
பள்ளிகள் பிரம்படியைக் கையாள்வது புதிதல்ல என்ற திரு லீ, தவறு செய்தால் பின்விளைவுகள் நிச்சயம் உண்டு என்பதை வலியுறுத்தும் ஒழுங்கு நடவடிக்கையின் ஓர் அங்கமாகப் பிரம்படி இருக்கிறது என்று விளக்கம் அளித்தார்.
“பிரம்படி என்பது தனித்து வழங்கப்படுவது அல்ல. பல்வேறு ஒழுங்கு நடவடிக்கைகளின் ஓர் அங்கமாக அது கையாளப்படுகிறது,” என்று திரு லீ கூறினார்.
பிரம்படி நிறைவேற்றப்பட்ட பிறகு மாணவரின் நலனையும் முன்னேற்றத்தையும் பள்ளிகள் கண்காணிக்கும் என்றும் செய்த தவற்றிலிருந்து பாடம் கற்க மாணவருக்கு ஆலோசனை வழங்கப்படும் என்றும் திரு லீ குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
பள்ளித் துன்புறுத்தலுக்கு எதிராக கல்வியமைச்சு கடந்த மாதம் வெளியிட்ட புதிய வழிகாட்டிகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 43 கேள்விகளை முன்வைத்தனர்.
ஆண்டு முழுதும் நடத்தப்பட்ட ஆய்வில் கல்வியமைச்சு பல்வேறு தரப்புகளைச் சேர்ந்த 2,000 பேரிடமிருந்து கருத்துகளைத் திரட்டியது.
அதன் அடிப்படையில் துன்புறுத்தும் மாணவரைப் பள்ளி முடிந்து பின்தங்கும்படி சொல்வது, தற்காலிகமாக அந்த மாணவரைப் பள்ளியிலிருந்து நீக்குவது, பிரம்படி கொடுப்பது உள்ளிட்ட வழிகாட்டிகள் அறிவிக்கப்பட்டன.
அனைத்துப் பள்ளியும் கல்வியமைச்சின் வழிகாட்டியை அடிப்படையாகக் கொண்டு துன்புறுத்தலுக்கு எதிரான கொள்கைகளை இவ்வாண்டு இறுதிக்குள் சுயமாக உருவாக்கவேண்டும் என்றும் திரு லீ நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டார்.

