வாகனம் ஓட்டும்போது மின்விளக்குக் கம்பம்மீது மோதிய ஆடவருக்கு வெள்ளிக்கிழமை (மே 16) மூன்று வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆடவருக்குக் காரில் பயணம் செய்த பெண் ஊழியர் விபத்துக்கான பழியை ஏற்பதாகக் கூறியதையும் ஆடவர் ஏற்றுக்கொண்டிருந்தார்..
36 வயது யுவென் செங் வென், ஈராண்டுகளுக்கு எந்தவித வாகன உரிமங்களையும் வைத்திருக்க தடை விதிக்கப்பட்டது.
மார்ச் 25, சிங்கப்பூரரான யுவென், கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதால் ஏற்பட்ட விபத்தை ஒப்புக்கொண்டார்.
சட்ட நடைமுறைக்குப் பாதிப்பு ஏற்படக்கூடிய வகையில் நடந்துகொள்ள முயன்ற குற்றத்தையும் யுவென் ஒப்புக்கொண்டார்.
யுவெனுடன் வாகனத்தில் பயணம் செய்த 31 வயது மலேசியரான சின் வெய் யீங்கிற்கும் மூன்று வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
சிங்கப்பூர் நிரந்தரவாசியான சின், சட்ட நடைமுறைக்குப் பாதிப்பு ஏற்படக்கூடிய வகையில் நடந்துகொண்ட குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
இதற்குமுன் நடந்த விசாரணையில் நண்பர்களான யுவெனும் சின்னும் சக ஊழியர்களுடன் கெங் லீ சாலையில் 2024, பிப்ரவரி 16ஆம் தேதி மாலை 6 மணியிலிருந்து இரவு 10.30 மணி வரை உணவருந்தினர்.
அப்போது யுவெனும் சின்னும் மது அருந்தினர். வீட்டில் விடுவதாக யுவென் கூறியதற்கு சின் சம்மதித்தார்.
தொடர்புடைய செய்திகள்
இரவு சுமார் 10.35 மணிக்கு மோல்மெயின் சாலையிலிருந்து மத்திய விரைவுச்சாலைக்குத் திரும்ப யுவென் முயன்றபோது வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்து அருகிலிருந்த மின்விளக்குக் கம்பத்தில் மோதினார்.
விபத்துக்கான பழியை ஏற்பதாகக் கூறிய சின் வாகனத்தில் யுவெனுடன் இடம் மாற்றி அமர்ந்தார். யுவெனும் அதற்கு சம்மதித்தார்.
இரவு சுமார் 11 மணிக்குச் சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறை அதிகாரிகள் யுவெனையும் சின்னையும் விசாரித்தனர்.
விபத்துக்குத் தான் தான் காரணம் என்று சொன்ன சின்னை அதிகாரிகள் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
நடந்ததை எண்ணி வருத்தமடைந்த யுவென், மறுநாள் தாமாக வந்து உண்மையை ஒப்புக்கொண்டார்.

