தெம்பனிஸ் விரைவுச்சாலையில் (டிபிஇ) ஒரு கார் தீப்பிடித்துக்கொண்டதில் ஆடவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இச்சம்பவம் வியாழக்கிழமை (அக்டோபர் 31) அதிகாலை நிகழ்ந்தது.
அதிகாலை 2.55 மணியளவில் தெம்பனிஸ் விரைவுச்சாலையில் தீ மூண்டதாகத் தங்களுக்குத் தகவல் வந்ததென சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விகளுக்குப் பதிலளித்தது. சம்பவம், மத்திய விரைவுச்சாலை நுழைவாயிலுக்கு அருகே நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
மாண்டவர் ஓர் ஆடவர் என்று நம்பப்படுகிறது. அவர் சம்பவ இடத்தில் உயிரிழந்ததை குடிமைத் தற்காப்புப் படை மருத்துவ உதவியாளர் ஒருவர் உறுதிப்படுத்தினார்.
மாண்டவர் பிஎம்டபிள்யு 520ஐ (BMW 520i) காரை ஓட்டிச் சென்றார்.
தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீ அணைக்கப்பட்டதாக குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து டிபிஇயில் சிலேத்தார் விரைவுச்சாலை நுழைவாயில் மூடப்பட்டதாக நிலப் போக்குவரத்து ஆணையம் எக்ஸ் சமூக ஊடகத் தளத்தில் வியாழக்கிழமை காலை 6.20 மணியளவில் குறிப்பிட்டது.
அதற்கு ஒரு மணிநேரத்துக்கும் குறைவான நேரம் கழித்து தீவு விரைவுச்சாலை நுழைவாயிலும் மூடப்பட்டதாக ஆணையம் தெரிவித்தது. காலை 9.20 மணியளவில் மூடப்பட்ட நுழைவாயில்கள் மீண்டும் திறந்துவிடப்பட்டன.

