ஜூரோங் வெஸ்ட்டில் தீப்பிடித்து எரிந்த கார்

1 mins read
88e15a24-663a-4896-bb4b-3057d4a1753d
காரின் இயந்திரம் தீப்பிடித்துக்கொண்டதாக அதிகாரிகள் கூறினர்.  - படங்கள்: அஸ்ஸா அமீர் அப்துல்லா/ ஃபேஸ்புக்

ஜூரோங் வெஸ்ட் வட்டாரத்தில் கார் ஒன்று தீப்பிடித்து எரிந்தது.

இந்தச் சம்பவம் புதன்கிழமை காலை (மார்ச் 5) நிகழ்ந்தது.

காலை 7.20 மணி அளவில் ஜூரோங் வெஸ்ட் ஸ்திரீட் 51ல் கார் தீப்பிடித்து எரிவதாகத் தகவல் கிடைத்தது என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

காரின் இயந்திரம் தீப்பிடித்துக்கொண்டதாக அதிகாரிகள் கூறினர்.

சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பாளர்கள் தீயை அணைத்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

தீச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

தீ மூண்டதற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடைபெறுகிறது.

மார்ச் 2ல் கார் ஒன்று தீப்பிடித்துக்கொண்டதை அடுத்து, காருக்குள் சிக்கிக்கொண்ட ஆடவர் மாண்டார்.

அந்தக் கார் நிக்கல் நெடுஞ்சாலையில் அதிவேகமாகச் சென்று விபத்துக்குள்ளானதை அடுத்து, தீப்பிடித்துக்கொண்டது.

மாண்டவர் சீ சோங் ஃபூட்ஸ் நிறுவனத்தின் 37 வயது இயக்குநர் என்று பிறகு தெரிவிக்கப்பட்டது.

அண்மையில், பாய லேபார் அருகில் தீவு விரைவுச்சாலையில் ஆறு வாகனங்கள் விபத்துக்குள்ளாகின.

அவற்றில் இரண்டு வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன.

அந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

2024ஆம் ஆண்டில் தீப்பிடித்து எரிந்த வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்ததாகச் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை வெளியிட்ட புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

அந்த ஆண்டில் 220 வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன.

2023ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 215ஆக இருந்தது.

வாகனங்களில் தீயணைப்பான்களை வைத்துக்கொள்ளும்படி வாகன ஓட்டுநர்களுக்கு சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அறிவுறுத்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்