திங்கட்கிழமை (ஜூன் 1) காலை சிலேத்தார் விரைவுச்சாலையில் நிகழ்ந்த விபத்தில் கார் ஒன்று தீப்பற்றி எரிந்தது.
இதில் ஆடவர் ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். புக்கிட் தீமா விரைவுச்சாலையை நோக்கிய திசையில் காலை 8.15 மணி அளவில் இந்த விபத்து நிகழ்ந்ததாகப் காவல்துறையும் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையும் தெரிவித்தன. லென்டோர் அவென்யூவுக்கு வெளியேறும் சாலைக்கு முன்பாக இந்த விபத்து நிகழ்ந்தது.
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்தபோது கார் தீப்பற்றி எரிந்துகொண்டிருந்தது. அதிகாரிகள் தண்ணீரைப் பீய்ச்சியடித்துத் தீயை அணைத்தனர். அந்தக் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சறுக்கியிருக்கக்கூடும் என நம்பப்படுகிறது.
கார் பயணியான 34 வயது ஆடவர் செங்காங் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவர் அப்போது சுயநினைவுடன் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
காரை ஓட்டிய 26 வயது பெண், சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உதவி வருகிறார். இணையத்தில் பகிரப்பட்ட இந்த விபத்து குறித்த காணொளியில், ஆறு வழிகளைக் கொண்ட விரைவுச்சாலையின் நான்காவது தடத்தில் கார் கொழுந்துவிட்டு எரிவதும், அதிலிருந்து கரும்புகை வெளிவருவதும் தெரிகிறது.
எரிந்துகொண்டிருந்த வாகனத்துக்குப் பின்னால் கார் பல மீட்டர் சறுக்கியதற்கான அடையாளங்கள் தட்டுப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

