ஈசூனில் பற்றி எரிந்த கார்

ஈசூனில் பற்றி எரிந்த கார்

படம்: ஏ‌ஷியா ஒன்

22 Nov 2026 - 6:07 pm

1 mins read

ஈசூனில் உள்ள வாகன நிறுத்துமிடம் ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 22) காலை தீச்சம்பவம் ஏற்பட்டது.

காரின் இயந்திரப் பகுதியில் தீ மூண்டது. அதில் அந்த காரும் அருகில் நிறுத்தப்பட்டிருந்த மேலும் இரு கார்களும் சேதமடைந்தன.

“ஈசூன் ஸ்திரீட் 22, புளோக் 270க்கு முன்னால் உள்ள கார்நிறுத்தத்தில் காலை 7.40 மணியளவில் தீப்பற்றியதைத் தன் ஊழியர் பார்த்தார்,” என்று இங் என்ற நபர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

காலை 6.55 மணியளவில் இச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததாகச் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

பல்நோக்கு காரின் வலதுபுறம் இருந்த நீல நிறக் காரின் முன் பக்கப் பாகங்கள் சேதமடைந்ததைப் படங்கள் காட்டின.

அதேபோல், பல்நோக்கு காரின் இடதுபுறம் இருந்த பழுப்பு நிற வாகனத்தின் முன் பக்கம், முகப்பு விளக்கு ஆகியவை தீயால் சேதமடைந்திருந்தன.

பல்நோக்கு காரின் முன் பாதி எரிந்து கடுமையாகச் சேதமடைந்திருந்தது. காரின் முன் பக்கக் கண்ணாடி, மேற்கூரைக் கண்ணாடி ஆகியவை சுக்குநூறாக உடைந்திருந்தன.

தீயணைப்பாளர்கள் தண்ணீர்க் குழாய் மூலம் தீயை அணைத்தனர். இச்சம்பவத்தில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.

பாதிக்கப்பட்ட வாகனம் மின்சார வாகனம் அல்ல என்று சோதனைகளில் தெரியவந்துள்ளது. தீவிபத்துக்கான காரணம் விசாரிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்