தெம்பனிஸ் வட்டாரத்தில் பெண் ஒருவர் ஓட்டிச் சென்ற கார் சாலை நடுவே இருந்த தடுப்பின்மீது மோதி விபத்துக்குள்ளானது. செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 20) இரவு நிகழ்ந்த அந்தச் சம்பவம் தொடர்பான விசாரணையில் அந்த 19 வயதுப் பெண் உதவி வருகிறார்.
தெம்பனிஸ் ஸ்திரீட் 96 மற்றும் பிடோக் ரிசர்வாயர் ரோடு சந்திப்பில் விபத்து நிகழ்ந்தது குறித்து இரவு 7.20 மணியளவில் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக காவல்துறையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் தெரிவித்தன.
தெம்பனிஸ் ஸ்திரீட் 96ல் கார் சறுக்கி விபத்துக்குள்ளானதாக நம்பப்படுகிறது. அந்த விபத்தில் ஒருவருக்குச் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதைக் குடிமைத் தற்காப்புப் படையினர் பரிசோதித்து உறுதிப்படுத்தினர்.
ஆனால் அவர் மருத்துவமனைக்குச் செல்ல மறுத்துவிட்டார். இது தொடர்பான காவல்துறையின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
சீன நாளிதழான சாவ்பாவ் வெளியிட்ட சமூக ஊடகக் காணொளி ஒன்றில், காரின் முன்பக்க வலதுபுறப் பகுதி சேதமடைந்ததைக் காணமுடிந்தது. சாலைத் தடுப்பின் உடைந்த கைப்பிடிகள் காரைச் சுற்றிலும் சிதறிக் கிடந்தன.
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை மற்றும் காவல்துறையின் வாகனங்களும் அதிகாரிகளும் சம்பவ இடத்தில் இருந்ததைக் காணொளி காட்டியது.
இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் நிகழ்ந்த விபத்துகளும் காயமடைந்தோர் எண்ணிக்கையும் கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் அதிகம் எனக் கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி போக்குவரத்துக் காவல்துறை தெரிவித்திருந்தது.
