போக்குவரத்துக் காவல்துறை கடிதம்: ‘மோசடி’ என்றெண்ணிய கார் ஓட்டுநர்

போக்குவரத்துக் காவல்துறை கடிதம்: ‘மோசடி’ என்றெண்ணிய கார் ஓட்டுநர்

2 mins read
72133db5-b6dc-4538-8cca-68b168d05380
தமக்கு அனுப்பப்பட்ட கடிதத்துக்குப் பயன்படுத்தப்பட்ட காகிதம் மோசமான தரத்தில் இருந்ததாக கார் ஓட்டுநர் குறிப்பிட்டார். - படங்கள்: ஸ்டோம்ப்

வாகன ஓட்டுநர் ஒருவருக்குப் போக்குவரத்துக் காவல்துறையிடமிருந்து ஒரு கடிதம் வந்திருந்தது. வாகனத்தைக் கொண்டு இடித்துவிட்டுச் சென்றதன் தொடர்பில் ஓட்டுநரின் கார் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று கடிதத்தில் குறிப்பிட்டிருந்தது.

இந்த விபத்து செப்டம்பர் 14ஆம் தேதி மாலை 6 மணியளவில் கேலாங் பாருவில் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, கூறப்படும் நாளன்று குறிப்பிட்ட அந்த நேரத்தில் காரைப் பயன்படுத்தியவர் யார் என்று வாகன உரிமையாளர் அடையாளம் கண்டு தெரிவிக்க வேண்டும் என்று கடிதத்தில் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் விசாரணை அதிகாரியைத் தொடர்புகொள்ளும் விவரங்களான அவரது மின்னஞ்சல் முகவரி, தொடர்பு எண், வாட்ஸ்ஆப் எண் ஆகியவையும் குறிப்பிடப்பட்டன.

ஆனால், தமக்கு அனுப்பப்பட்ட கடிதத்துக்குப் பயன்படுத்தப்பட்ட காகிதம் மோசமான தரத்தில் இருந்ததாகவும் அச்சிடப்பட்ட எழுத்துகளும் பார்ப்பது தரக்குறைவாக இருந்ததாகவும் கார் உரிமையாளர் சமூக ஊடகப் பதிவு ஒன்றில் சுட்டியிருந்தார்.

“மோசடிக்காரர்கள் இப்போதெல்லாம் நன்றாக ஏமாற்றத் தொடங்கிவிட்டனர். எனது வீட்டு முகவரி, கார் எண், நான் எந்த நேரத்தில் எங்கிருந்தேன் இப்படி அனைத்தையும் தெரிந்து வைத்திருக்கிறார்கள்,” என்று பதிவிட்ட அந்த கார் உரிமையாளர், பெரும் அச்சுறுத்தலாக இது உருவெடுத்துள்ளதாகக் கூறினார்.

ஆனால், கடிதம் உண்மையானதே என்று ஸ்டோம்ப் செய்தித் தளம் பின்னர் கண்டறிந்தது.

இதற்கிடையே, சமூக ஊடகத்தில் பதிவிட்டவர் வேடிக்கைக்காக இவ்வாறு செய்தாரா அல்லது அவருக்குப் போதுமான தகவல் தெரிவிக்கப்படவில்லையா என்பது தெளிவில்லாமல் உள்ளது.

இந்நிலையில், அதிகாரபூர்வ தகவல்களை மோசடி என்று வகைப்படுத்துவதற்கு முன்னர் அதிலுள்ள விவரங்களைச் சரிபார்ப்பது முக்கியம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்