கார்களும் மோட்டார்சைக்கிள்களும் சம்பந்தப்பட்ட மூன்று சாலை விபத்துகள் குறித்து விசாரணை மேற்கொள்வதாகக் காவல்துறை கூறியுள்ளது.
ஆக அண்மைய விபத்து, உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியை நோக்கிச் செல்லும் புக்கிட் தீமா விரைவுச்சாலையில் சனிக்கிழமை (ஏப்ரல் 5) மாலை 4 மணியளவில் நிகழ்ந்தது.
இதன் தொடர்பில் எஸ்ஜி ரோடு விஜிலான்டே ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றப்பட்ட காணொளியில் மூன்று தடங்கள் கொண்ட சாலையின் இடத் தடத்திலும் வலத் தடத்திலும் கார்கள் குறைந்த இடைவெளியில் ஒன்றன்பின் ஒன்றாக நகர்வது தெரிகிறது.
திடீரென்று ஒரு வெள்ளை கார் வலத்தடத்திலிருந்து இடத்தடத்திற்குச் செல்ல முயன்றபோது நடுத்தடத்தில் வந்த மோட்டார்சைக்கிள் அதன் மீது மோதியது.
மோட்டார்சைக்கிளை ஓட்டிய 45 வயது ஆடவர் கூ டெக் புவாட் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்பட்டது.
மற்றொரு காணொளியில், சனிக்கிழமை முன்னேரம் நான்கு தடங்கள் கொண்ட மத்திய விரைவுச்சாலையின் இடக்கோடித் தடத்திலிருந்து தடம் மாறிய ஒரு கார், வலமிருந்து இரண்டாம் தடத்தில் பயணம் செய்த மோட்டார்சைக்கிளை மோதியது.
35 வயதாகும் மோட்டார்சைக்கிளோட்டி டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.
மூன்றாவது சம்பவத்தில், ஏப்ரல் 3ஆம் தேதி மாலை 6 மணியளவில் ஹில் ஸ்திரீட்டுக்கும் ஸ்டாம்ஃபர்டு ரோட்டுக்கும் இடையிலான சந்திப்பில் மோட்டார்சைக்கிளோட்டியை மோதிய கார் நில்லாமல் சென்றுவிட்டதாகக் கூறப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
மோட்டார்சைக்கிளை ஓட்டிய 28 வயது ஆடவர் டான் டோக் செங் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
மூன்று விபத்துகளிலும் சம்பந்தப்பட்ட கார் ஓட்டுநர்கள் விசாரணையில் உதவி வருகின்றனர்.