லிட்டில் இந்தியாவில் காவல்துறை உத்தரவை மீறி பறந்த கார் கவிழ்ந்தது; நால்வர் காயம்

லிட்டில் இந்தியாவில் காவல்துறை உத்தரவை மீறி பறந்த கார் கவிழ்ந்தது; நால்வர் காயம்

படம்: ஏஷியாஒன்

07 Nov 2026 - 12:49 pm

2 mins read

லிட்டில் இந்தியாவில் காவல்துறையின் உத்தரவையும் மீறி தப்பியோடிய கார், மற்றொரு வாகனத்தின்மீது மோதி கவிழ்ந்தது. சனிக்கிழமை நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் கார் ஓட்டுநர் உட்பட நால்வர் காயம் அடைந்தனர். கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.

அபாயகரமான ஆயுதங்களால் ஒருவரை காயப்படுத்திய குற்றம், மது அருந்தியதற்கான மூச்சுப் பரிசோதனையை செய்துகொள்ள மறுத்தது ஆகியவற்றின்கீழ் அந்த 33 வயது கார் ஓட்டுநர்மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என்று காவல்துறை அதே சனிக்கிழமை காலை வெளியிட்ட தகவலில் தெரிவித்துள்ளது.

வெள்ளிக்கிழமை இரவு 8.35 மணி அளவில் ரிவர் வேலி சாலையில் 34 வயது நபரை அவர், கூர்மையான ஆயுதத்தால் தாக்கியதாக காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் காயமடைந்த நபர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் தாக்கிய நபர் காரில் தப்பிவிட்டார்.

இந்த நிலையில் நள்ளிரவு 12.05 மணியளவில் டெசன்சான் சாலையில் சுற்றுக் காவலில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் அவரது வாகனத்தைக் கண்டதால் நிறுத்துமாறு சைகை காட்டினர். ஆனால், வாகனத்தை நிறுத்தாமல் அவர் வேகமாக ஓட்டிச் சென்றதால் மற்றொரு கார்மீது மோதி கார் கவிழ்ந்தது.

காரை சோதனையிட்ட அதிகாரிகள்.
காரை சோதனையிட்ட அதிகாரிகள். - படம்: ஏஷியாஒன்
காரில் கண்டுபிடிக்கப்பட்ட பீர் கலன்கள், வோட்கா போத்தல்.
காரில் கண்டுபிடிக்கப்பட்ட பீர் கலன்கள், வோட்கா போத்தல். - படம்: ஏஷியாஒன்

அதிகாலை 12.50 மணியளவில் ஏஷியாஒன் செய்தியாளர்கள் அங்கு சென்றபோது, போக்குவரத்து காவல்துறையின் இரண்டு அதிவேக நெடுஞ்சாலை சுற்றுக் காவல் கார்கள், இரண்டு சுற்றுக்காவல் மோட்டார் சைக்கிள்கள், நான்கு அவசர சிகிச்சை வாகனங்கள், ஏழு காவல்துறை கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் துணை மருத்துவ ஊழியர்கள் முதலுதவி சிகிச்சை அளிக்கவும், சம்பவ இடத்தில் புலனாய்வு மேற்கொள்ளவும் சாலைச் சந்திப்பின் பெரும்பகுதி தற்காலிகமாக மூடப்பட்டது.

ஏஷியாஒன் கேள்விகளுக்குப் பதிலளித்த காவல்துறையும் குடிமைத் தற்காப்புப் படையும் 36 வயது தனியார் வாடகை கார் ஓட்டுநரும் 29 முதல் 42 வயதுக்குட்பட்ட அவரது காரில் பயணம் செய்த இரண்டு பெண் பயணிகளும் சுயநினைவுடன் டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகக் கூறினர்.

சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்ட 33 வயது கார் ஓட்டுநர் சுயநினைவுடன் சாங்கி பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

காவல்துறையினர் 30 நிமிடங்களுக்கும் மேலாக காரை சோதனையிட்டனர்.

காரில் குறைந்தது ஆறு பீர் கலன்களும் ஒரு வோட்கா போத்தலும் கண்டுபிடிக்கப்பட்டன.

காரில் இருந்த கூர்மையான ஆயுதங்கள்.
காரில் இருந்த கூர்மையான ஆயுதங்கள். - படம்: ஏஷியாஒன்

மேலும், ஒரு கத்தரிக்கோல், பேனா கத்தி, கடிதம் திறக்கும் இரண்டு கத்திகள் போல் தோற்றமளிக்கும் ஆயுதங்கள் உட்பட குறைந்தது நான்கு கூர்மையான பொருள்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.

கார் ஓட்டுநர் மீது சனிக்கிழமை காலை நீதிமன்றத்தில் குற்றச்சாட்டப்படும் என காவல்துறை தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்