தெம்பனிஸ் விபத்தில் இருமுறை தலைகுப்புறக் கவிழ்ந்த கார்

1 mins read
ஓட்டுநர் மருத்துவமனையில்
f4132a99-db67-465b-a8e5-0e14b432124b
விபத்தைக் காட்டும் காணொளி ஒன்று, திங்கட்கிழமை ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டது. - படம்: SG ROAD VIGILANTE/ஃபேஸ்புக்

தெம்பனிஸ் சாலையில் சனிக்கிழமை (பிப்ரவரி 22) இரு கார்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் காயமுற்ற 30 வயது ஆடவர் ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

காலாங்-பாய லேபார் விரைவுச்சாலையை நோக்கிச் செல்லும் தெம்பனிஸ் சாலையில் நிகழ்ந்த அந்த விபத்து குறித்து இரவு 8.45 மணியளவில் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக காவல்துறையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் தெரிவித்தன.

விபத்தில் காயமுற்ற கார் ஓட்டுநர் சாங்கி பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது அவர் சுயநினைவுடன் இருந்ததாக அவை கூறின.

விபத்தைக் காட்டும் காணொளி ஒன்று, திங்கட்கிழமை ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டது. சாலையின் இடது தடத்தில் சென்ற கறுப்பு காருக்கு முன்னால் பேருந்து ஒன்று பேருந்து நிறுத்தத்தில் நின்றதைத் தொடர்ந்து, அந்த கார் நடுத்தடத்துக்கு மாறியது.

அந்த காருக்குப் பின்னால் வந்த வெள்ளை கார் அதன் மீது மோதியதில், அந்த வெள்ளை கார் இருமுறை தலைகுப்புறக் கவிழ்ந்து அதன் ஒரு பகுதி சாலைத் தடுப்பின் மீது ஏறியது.

அந்த விபத்தில், போக்குவரத்து அறிவிப்புப் பலகை ஒன்று சேதமுற்றது. விபத்து குறித்து காவல்துறை விசாரணை தொடர்கிறது.

குறிப்புச் சொற்கள்