சிவப்பு நிறத்தில் கால்வாய் நீர்; கார் கழுவும் நிறுவனத்திடம் விசாரணை

2 mins read
e2375efa-efa3-4723-9e5e-9212c7f797f8
அக்டோபர் 13, 17ஆம் தேதி மாலை நேரங்களில் கால்வாய் நீர் சிவப்பு நிறத்தில் கண்டறியப்பட்டது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வாசகர்

கெம்பாங்கான் பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றில் மர்மமான முறையில் சிவப்பு நிறத்தில் நீர் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, கார் கழுவும் நிறுவனம் ஒன்று விசாரிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விகளுக்கு புதன்கிழமை (அக்டோபர் 23) பதிலளித்த தேசிய சுற்றுப்புற வாரியம், அக்டோபர் 13, 17ஆம் தேதி மாலை நேரங்களில் கால்வாய் நீர் சிவப்பு நிறத்தில் கண்டறியப்பட்டதைப் பொதுமக்களில் சிலர் தெரிவித்து இருந்ததாகக் கூறியது.

கெம்பாங்கான் எம்ஆர்டி நிலையத்துக்கு அருகே உள்ள அந்தக் கால்வாயில் அக்டோபர் 13ஆம் தேதி சிவப்பு நிற நீரை தாம் கண்டறிந்ததாக திரு சுவா என்பவர் கூறினார்.

“நான் முதன்முதலில் பார்த்தபோது ஆச்சரியப்பட்டேன், ஏனெனில் கால்வாய் நீர் இவ்வளவு சிவப்பாக இருந்ததை நான் பார்த்ததில்லை,” என்றார் அந்த 28 வயதுப் பொறியாளர்.

கால்வாயில் சிறு தூரத்திற்கு மட்டுமே அப்படி இருக்கும் என நினைத்த அவர், “ஆனால், அது ஏறத்தாழ 400 மீட்டர் தூரத்துக்கு நீண்டது. அதற்கான காரணம் என்னவாக இருக்கும் என்பதை அறிய நான் விரும்பினேன்,” என்றார்.

அக்டோபர் 14ஆம் தேதி காலை பெய்த கனமழைக்குப் பிறகு தேசிய சுற்றுப்புற வாரிய அதிகாரிகள் அங்கு சென்று விசாரணை நடத்தியபோது, கால்வாய் நீரில் எதுவும் சரியாக இல்லாததை அவர்கள் கண்டறியவில்லை.

எனினும், அக்டோபர் 17ஆம் தேதி மாலை கால்வாய் நீர் மீண்டும் சிவப்பு நிறத்தில் கண்டறியப்பட்டது.

அக்டோபர் 18ஆம் தேதி காலை தேசிய சுற்றுப்புற வாரிய அதிகாரிகள் மீண்டும் அங்கு சென்று சோதனை நடத்தியபோது, சிவப்பு நிற கால்வாய் நீருக்கும் கார் கழுவும், பராமரிப்புச் சேவை வழங்கும் நிறுவனத்திற்கும் தொடர்பு இருந்ததை அவர்கள் கண்டறிந்தனர்.

கழிவுகளை வெளியேற்றுவதை நிறுத்திவிட்டு, இதனால் பாதிக்கப்பட்ட பொது கால்வாய்களைச் சுத்தம் செய்யுமாறு அந்த நிறுவனத்திற்கு வாரியம் உடனடியாக அறிவுறுத்தியது.

நான் முதன்முதலில் பார்த்தபோது ஆச்சரியப்பட்டேன், ஏனெனில் கால்வாய் நீர் இவ்வளவு சிவப்பாக இருந்ததை நான் பார்த்ததில்லை
சுவா, 28, பொறியாளர்

சிங்கப்பூர் நீர்ப்பகுதிகளில் மாசு ஏற்படுவதைக் கடுமையாகக் கருதுவதாகவும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மேலாண்மைச் சட்டத்தின்கீழ் குற்றம் புரிந்ததற்காக தற்போது அந்நிறுவனத்திடம் விசாரணை நடத்தி வருவதாகவும் தேசிய சுற்றுப்புற வாரியம் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்