அதிக மாற்றமின்றி இருக்கும் கரிம வரி வருவாய்

அதிக மாற்றமின்றி இருக்கும் கரிம வரி வருவாய்

2 mins read
351c2540-01f3-4c95-bcd9-2e37acc687b3
சிங்கப்பூரின் தொழில்துறை வட்டாரங்களில் ஒன்றான ஜூரோங் தீவு. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கடந்த 2025ஆம் ஆண்டு கரிம வரி மூலம் வசூலிக்கப்பட்ட தொகை, 2024ல் ஈட்டப்பட்டதுடன் ஒப்பிடக்கூடிய அளவிலேயே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் செப்டம்பர் மாத இறுதிக்குள் 2025ஆம் ஆண்டுக்கான மொத்த கரிம வரித் தொகை வசூலிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரித் தொகை சுமார் 660 மில்லியன் வெள்ளியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

கரிமப் பயன்பாட்டைக் கைவிடுமாறு ஊக்குவிப்பதற்காக வழங்கப்பட்ட சலுகை தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருவதை இந்தப் போக்கு சித்திரிப்பதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். கரியமில வாயு வெளியேற்றும் நிறுவனங்ககளில் தேவைப்படும் நிறுவனங்களுக்கு அரசாங்கம் கரிம வரி விலைக் கழிவு வழங்கியிருந்தது.

இந்த விலைக் கழிவு முதலில் 2024ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. எந்தெந்த நிறுவனங்கள் இதன் மூலம் பலனடையும், எவ்வளவு காலம் அவற்றுக்கு உதவி வழங்கப்படும் போன்ற விவரங்கள் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை.

2024, 2025ஆம் ஆண்டுகளில் வெளியேற்றப்படும் ஒரு டன் கரியமில வாயுவுக்கு 25 வெள்ளி வரி விதிக்கப்பட்டது.

2019லிருந்து 2023ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் அத்தொகை ஐந்து வெள்ளியாக இருந்தது. அந்தக் காலகட்டத்தில் கரிம வரி மூலம் வசூலிக்கப்பட்ட தொகை ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 200 மில்லியன் வெள்ளியாக இருந்தது.

2026ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்ட வருவாய், செலவினக் கணிப்பு ஆவணத்தின்படி 2024ல் ஈட்டப்பட்ட கரிம வரித் தொகை சுமார் 658.8 மில்லியன் வெள்ளியாகும். அதேவேளை, 2025ஆம் ஆண்டுக்கான அத்தொகை கிட்டத்தட்ட 657.3 மில்லியன் வெள்ளியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

பெரிய அளவில் கரியமில வாயுவை வெளியேற்றும் நிறுவனங்களைப் பசுமை எரிசக்திக்கு மாறிக்கொள்ள அல்லது மேலும் ஆக்ககரமான முறையில் செயல்பட அல்லது குறைவான அளவு கரிமப் பயன்பாட்டை ஊக்குவிப்பதே கரிம வரி விதிக்கப்பட்டுள்ளதற்கான இலக்காகும். கனிம எரிபொருள் விலையை அதிகரிக்கச் செய்து வரிவிதிப்பு மேற்கொள்ளப்படுகிறது.

சிங்கப்பூரில் கரிம வரிக்கு உட்படுத்தப்படக்கூடிய 50 நிலையங்கள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை உற்பத்தி, மின்சரா, கழிவு, நீர்த் துறைகளைச் சேர்ந்தவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவற்றிலிருந்து வெளியாகும் கரியமில வாயுவின் அளவு, நாடு முழுவதும் வெளியாகும் ஒட்டுமொத்த கரியமில வாயுவின் அளவில் கிட்டத்தட்ட 70 விழுக்காடாகும்.

2026, 2027ஆம் ஆண்டுகளில் கரிம வரி, டன்னுக்கு 45 வெள்ளியாக அதிகரிக்கும். 2030க்குள் அந்த வரி 50லிருந்து 80 வெள்ளி வரை அதிகரிக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்