தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வியட்னாமுடன் கரிம வர்த்தக ஒப்பந்தம்

2 mins read
c8fb49c5-d4ba-4f9b-951e-1ee4c38cb843
2021 முதல் 2030 வரை, ஆண்டுக்கு ஏறத்தாழ 2.5 மில்லியன் டன்கள் கரிம வெளியீட்டைக் குறைப்பதற்கு சிங்கப்பூர் உயர்தர கரிம ஊக்கப் புள்ளிகளைப்  பயன்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தாய்லாந்திற்குப் பிறகு இரண்டாவது தென்கிழக்காசிய நாடாக சிங்கப்பூருடன் கரிம வர்த்தக ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது வியட்னாம். 

இதன்வழி, வட்டாரத்தில் கரிம ஊக்கப் புள்ளிகளைப் (carbon credit) பெறுவதற்கான சிங்கப்பூரின் சந்தை விரிவடைந்துள்ளது. 

காற்று மண்டலத்திற்கு வெளியாகாமல் தடுக்கப்படும் கரிம வாயுக்களின் அளவைப் பிரதிபலிக்கும் பற்றுச்சீட்டு போன்றது கரிம ஊக்கப் புள்ளி. 

மரங்களை நடுவது, புதுப்பிக்கக்கூடிய வளங்களிலிருந்து ஆற்றலை வெளிக்கொணரும் ஆலைகளை அமைப்பது உள்ளிட்டவை கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைக்கும்  திட்டங்களாகும். இந்தத் திட்டங்களின்வழி பெறப்படும் கரிம ஊக்கப் புள்ளிகள் பிற தரப்புகளுக்கு விற்கப்படலாம். 

இந்த இருதரப்பு ஒப்பந்தத்தின் மூலம், சிங்கப்பூரிடம் கரிம ஊக்கப் புள்ளிகளை விற்கக்கூடிய ஒன்பதாவது நாடாக வியட்னாம் உள்ளது.

சிங்கப்பூர் அரசாங்கமோ அல்லது கரிம வரி செலுத்த வேண்டிய நிறுவனங்களோ, கரிம வெளியீடுகளின் ஒரு பகுதியைக் குறைப்பதற்காக கரிம ஊக்கப் புள்ளிகளை வியட்னாமிலிருந்து வாங்கலாம்.

சிங்கப்பூரின் நீடித்த நிலைத்தன்மை மற்றும் சுற்றுப்புற அமைச்சரும் வர்த்தக உறவுகளுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான கிரேஸ் ஃபூவும் வியட்னாமின் வேளாண்மை மற்றும் சுற்றுப்புறச் சூழல் துறை அமைச்சர் ட்ரான் டக் தாங்கும் இதற்கான ஒப்பந்தத்தில் செவ்வாய்க்கிழமை (செப்டம்ர் 16) கையெழுத்திட்டனர்.

மெய்நிகர்வழியாக கையெழுத்துகள் பதியப்பட்டன.

இதேபோன்ற ஒப்பந்தத்தில் தாய்லாந்து, பப்புவா நியூ கினி, கானா, பூட்டான், சிலி, பெரு, ருவாண்டா, பராகுவே என எட்டு நாடுகளுடன் சிங்கப்பூர் இணைந்துள்ளது.

இரு நாடுகளுக்கு இடையில் கரிம ஊக்கப் புள்ளிகளை அனைத்துலக அளவில் பரிமாறிக்கொள்வதற்கான சட்டப்பூர்வ ஆவணமாக இந்த ஒப்பந்தம் திகழ்கிறது.

உலக வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்துவதற்காக 195 நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அனைத்துலக ஒப்பந்தமான பாரிஸ் ஒப்பந்தத்தின்கீழ், ஒரு நாடு தங்கள் நாட்டின் பருவநிலை இலக்குகளை அடைவதற்காக, மற்ற நாடுகளில் உருவாக்கப்பட்ட கரிம ஊக்கப் புள்ளிகளை வாங்கலாம்.

சில தரப்பினர், தங்களது சொந்த கரிம வெளியீடுகளைக் குறைப்பதைவிட  கரிம ஊக்கப் புள்ளிகளை வாங்குவதற்கான செலவு சில நேரங்களில் குறைவாக இருப்பதால் அத்தகையோர்க்குக் கரிமச் சந்தைகள் பயனுள்ளதாக அமைகின்றன.

அதேபோல், இந்தத் திட்டங்களை நடத்தும் நாடுகளும் வருவாய் ஈட்டுகின்றன. ஏனெனில், இத்தகைய திட்டங்கள் மூலம் வரும் வருமானம், சுற்றுச்சூழலுக்கு உகந்த திட்டங்களுக்கு நிதியை ஈட்டித் தருகின்றன.

குறிப்புச் சொற்கள்