முதியவர்கள் இருவரைக் கவனித்துவந்த நிபுணத்துவப் பராமரிப்பாளர் ஒருவர் அவர்களின் வங்கி அட்டையை வைத்து அவர்களிடமிருந்து திருடியதை திங்கட்கிழமை (டிசம்பர் 29) ஒப்புக்கொண்டார்.
பெரனாலஸ் டெர்வின் சொரியா, 41, என்பவர் பாதிப்புக்கு ஆளாக அதிக சாத்தியம் உள்ளவரிடம் திருடியதாக ஒரு குற்றச்சாட்டையும் ஏமாற்றியதாக ஒரு குற்றச்சாட்டையும் ஒப்புக்கொண்டார். அவர் மீது சுமத்தப்பட்ட இவ்விரு குற்றச்சாட்டுகளும் இணைக்கப்பட்டன.
இம்மாதம் தீர்ப்பளிக்கும்போது மேலும் ஐந்து குற்றச்சாட்டுகள் கருத்தில்கொள்ளப்படும். குற்றங்கள் நடந்தபோது பிலிப்பீன்ஸ் நாட்டைச் சேர்ந்த பெர்னாலஸ் ஆசியானா கேர்கிவர்ஸ் (Aseana Caregivers) நிறுவனத்துக்கு வேலை செய்து வந்தார்.
அவர் குறிவைத்தவர்களில் ஒருவர் மறதிநோய், மனப்பதற்றக் குறைபாடு உள்ளிட்டவற்றுக்கு ஆளான 80 வயது ஆடவராவார். தனது பணத்தைக் கண்காணிக்க இயலாததால் அந்த முதியவரால் வீட்டுச் செலவுகளைக் கவனித்துக்கொள்ள முடியவில்லை.
அவரைக் கவனித்துக்கொள்ள மகன், பராமரிப்பாளரை நியமித்தார். கடந்த மார்ச் மாத இறுதியிலும் ஏப்ரல் மாதத் தொடக்கத்திலும் பல நாள்களுக்கு பெர்னாலசிடம் அப்பொறுப்பு வழங்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட ஆடவருக்கும் பெர்னாலசுக்கும் நெருக்கம் ஏற்பட்டதால் அந்த ஆடவர் பெர்னாலசிடம் தனது தனிப்பட்ட வருத்தங்களையும் பகிர்ந்துகொண்டார்.
அதனைத் தொடர்ந்து முதியவரின் ஏடிஎம் அட்டையைப் பெற்ற பெர்னாலஸ் ஆறு நாள்களில் எட்டு முறை அதனைக் கொண்டு 10,000 வெள்ளி எடுத்திருக்கிறார். ஆடவரின் வங்கிக் கணக்குப் புத்தகத்தில் கணக்கு விவரங்களைப் புதுப்பித்தபோது பெர்னாலஸ் இச்செயலில் ஈடுபட்டதை மகன் அறிந்தார்.

