கோவனில் பராமரிப்புடன் கூடிய மூத்தோருக்கான வீடுகள்

கோவனில் பராமரிப்புடன் கூடிய மூத்தோருக்கான வீடுகள்

2 mins read
c049ad78-1055-47f3-bb87-e7a7c8e99291
PIXPERENNIAL பெரினியல் நிறுவனத்தின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான புவா செக் குவான். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

சிங்கப்பூர் / சீனா: பராமரிப்புச் சேவைகளுடன் கூடிய உகந்த வீடுகளை எதிர்பார்க்கும் மூத்தோர் அத்தகைய முன்னோடித் திட்டத்துக்கு இவ்வாண்டின் மூன்றாம் காலாண்டிலிருந்து பதிவு செய்துகொள்ளலாம்.

கோவன் வட்டாரத்தில் பெர்ரி அவென்யூவில் அமையவிருக்கும் அந்தத் திட்டத்தில் மூத்தோர் அடுத்த ஆண்டு முதலாம் காலாண்டுக்குள் குடியேறலாம் என்று குடியிருப்புத் திட்டத்தை நிர்வகிப்பதற்காக நியமிக்கப்பட்ட நிறுவனம் தெரிவித்தது.

திட்டத்தை நிர்வகிப்பதற்கான ஒப்பந்தத்தை ஒருங்கிணைந்த சொத்துச் சந்தை, சுகாதாரப் பராமரிப்பு நிறுவனமான பெரினியல் ஹோல்டிங்க்ஸ் 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் வென்றது.

பரமாரிப்பு இல்லத்தின் தீவிர பராமரிப்பு தேவைப்படாத சில மூத்தோருக்கு ஓரளவுக்கு உதவி தேவைப்படக்கூடும். அதன் அடிப்படையில் துரிதமாக மூப்படையும் சிங்கப்பூரில் மூத்தோர் பராமரிப்புக்கான தெரிவுகளைப் புதிய மேம்பாடு விரிவுபடுத்துகிறது.

தனியார் நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் புதிய இடம், புக்கிட் பாத்தோக், குவீன்ஸ்வே ஆகியவற்றில் அரசாங்கத்தால் நடத்தப்படும் சமூகப் பராமரிப்புக் குடியிருப்புகளைப் போல செயல்படும். சுகாதார அமைச்சும் நகர மறுசீரமைப்பு ஆணையமும் இதர நிறுவனங்களுடன் இணைந்து உருவாக்கிய திட்டத்தைப் போல புதிய இடத்தில் புதிய வீடுகளுடன் கூடிய பராமரிப்பும் கிடைக்கும்.

பெர்ரி அவென்யூத் திட்டம், பெரினியல் நிறுவனத்தின் முதல் சிங்கப்பூர் திட்டமாக இருந்தாலும் சீனாவில் உள்ள சுகாதாரம், மூத்தோர் பரமாரிப்பு ஆகிய துறைகளில் நிறுவனத்துக்குக் கிட்டத்தட்ட பத்தாண்டுக்கு மேற்பட்ட அனுபவம் உள்ளது. நிறுவனம் 2015ஆம் ஆண்டு சந்தையில் தனது சேவைகளை விரிவுபடுத்தியது.

பெரினியல் நிறுவனம், சீனாவில் பயன்படுத்திய முன்னோடித் தொழில்நுட்பக் கருவிகளையும் ஒருங்கிணைந்த சுகாதார பராமரிப்பை மூத்தோருக்கு எப்படி வழங்குவது என்பதில் கிடைத்த அனுபவத்தையும் சிங்கப்பூருக்குக் கொண்டு வர விரும்புவதாக பெரினியல் நிறுவனத்தின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான புவா செக் குவான் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார்.

ஏறக்குறைய 195,000 சதுர அடி பரப்பளவில் உருவாக்கப்படும் புதிய திட்டத்தில் 200 பராமரிப்புடன் கூடிய குடியிருப்புகள் அமைந்திருக்கும். 100 படுக்கை கொண்ட பராமரிப்பு இல்லம், மனமகிழ் மன்றம், முதியோர் பராமரிப்பு நிலையம், புதிய 1.5 ஹெக்டர் பரப்பளவிலான சமூக பூங்கா ஆகியவற்றையும் எதிர்பார்க்கலாம்.

ஆரோக்கியமுள்ள மூத்தோரிலிருந்து அன்றாட உதவியும் பரமாரிப்புத் தேவைகளும் கொண்ட மூத்தோர் வரை புதிய குடியிருப்பில் பார்த்துக்கொள்ளப்படுவர். மறதி நோய் உள்ளோருக்கும் அங்கு இடம் உண்டு.

குடியிருப்பாளர்கள், 366 சதுர அடியில் உள்ள ஓரறை வீட்டையோ 666 சதுர அடியில் உள்ள ஈரறை வீட்டையோ தேர்வு செய்யலாம். முற்றங்கள், பசுமை பகுதிகளுக்கு அவர்களைக் கொண்டு செல்ல தனி மின்தூக்கிச் சேவைகளையும் அமைந்திருக்கும்.

குறிப்புச் சொற்கள்