கிறிஸ்துமஸ் அலங்காரங்களுடன் கார்கள்; நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்

2 mins read
6d0f97f5-f1f0-4440-9b99-65a350d51f0c
கிறிஸ்துமஸ் அலங்கார விளக்குகள் பொருத்தப்பட்ட கார் ஒன்றின் படத்தை நிலப் போக்குவரத்து ஆணையம் தமது பதவில் பதிவேற்றம் செய்தது. - படம்: நிலப் போக்குவரத்து ஆணையம்/ஃபேஸ்புக்

கிறிஸ்துமஸ் அலங்காரங்களைப் பயன்படுத்தி தங்கள் கார்களை அலங்கரித்து அவற்றை சாலைகளில் ஓட்டிச் சென்ற ஓட்டுநர்களுக்கு எதிராகச் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்துமஸ் விடுமுறைக் காலத்தின்போது 165க்கும் அதிகமான குற்றங்களின் பேரில் மொத்தம் 86 வாகனங்கள் பிடிபட்டதாக நிலப் போக்குவரத்து ஆணையம் ஜனவரி 3ஆம் தேதியன்று ஃபேஸ்புக்கில் பதிவிட்டது.

அனுமதிக்கப்படாத மாற்றங்களை வாகனங்களில் செய்வோரைப் பிடிக்க சிங்கப்பூரெங்கும் இரண்டு வாரங்களுக்கு அதிரடிச் சோதனை நடத்தப்பட்டது.

கிறிஸ்துமஸ் அலங்கார விளக்குகள் பொருத்தப்பட்ட கார் ஒன்றின் படத்தை ஆணையம் தனது பதிவில் கூறியிருந்தது.

இவ்வாறு கார்களில் அலங்கார விளக்குகளைப் பொருத்தி சாலை விதிமுறையை மீறிய ஏறத்தாழ 50 வாகனங்கள் பிடிபட்டன.

கிறிஸ்துமஸ் அலங்கார விளக்குகளுடன் சாலைகளில் செல்லும் கார்களைக் காட்டும் படங்கள் எஸ்ஜி ரோடு விஜிலாண்டே ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டன.

அந்த ஃபேஸ்புக் பக்கத்தை 280,000க்கும் மேற்பட்டோர் பின்தொடர்ந்து வருகின்றனர்.

இவ்வாறு அலங்கார விளக்குகளுடன் சாலையில் சென்ற வாகனங்ளுக்கு எதிராகச் சிலர் கருத்து தெரிவித்தனர்.

இதில் தவறு ஏதும் இல்லை என்று சிலர் கூறினர்.

தங்கள் விருப்பம்போல காரை அலங்கரிக்க அனுமதி ஏன் வழங்கப்படவில்லை என்று குறைந்தது பத்து இணையவாசிகள் கேள்வி எழுப்பினர்.

ஆனால் இத்தகைய அலங்கார விளக்குகளுடன் கார்கள் செல்லும்போது சாலைகளைப் பயன்படுத்தும் மற்ற வாகன ஓட்டுநர்கள், பாதசாரிகள் ஆகியோருக்குக் கவனச் சிதறல் ஏற்படும் என்றும் அதனால் விபத்துகள் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் சிலர் கூறினர்.

சாலைகளைப் பயன்படுத்தும் மற்றவர்களுக்குக் கவனச் சிதறலை ஏற்படுத்தும், குழப்பத்தை விளைவிக்கும் விளக்குகளை வாகனங்களில் பொருத்தக்கூடாது என்று ஒன் மோட்டரிங் இணையத்தளத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாக நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.

இதுபோன்று சட்டவிரோதமாக வாகனங்களில் மாற்றங்களைச் செய்வோருக்கு $5,000 வரை அபராதம், மூன்று மாதங்கள் வரை சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

மீண்டும் மீண்டும் இக்குற்றத்தைப் புரிபவர்களுக்கு விதிக்கப்படும் தண்டனை இதைவிட இரண்டு மடங்கு அதிகமாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்