வாடிக்கையாளர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் எனப் பயனீட்டாளர் சங்கம் வலியுறுத்து

வாடிக்கையாளர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் எனப் பயனீட்டாளர் சங்கம் வலியுறுத்து

படம்: தமிழ்முரசு

05 Oct 2026 - 2:27 pm

2 mins read

வாடிக்கையாளர்களைப் பாதுகாக்க உரிய அமலாக்க நடவடிக்கைகள் தேவை என்று கேஸ் என்றழைக்கப்படும் சிங்கப்பூர் பயனீட்டாளர் சங்கம் அறைகூவல் விடுத்துள்ளது.

அண்மையில் ‘ட்ரூ ஃபிட்னஸ்’, ‘ட்ரூ யோகா’, ‘யோகா இங்க்’ ஆகிய உடற்பயிற்சி நிலையங்கள் முன்னறிவிப்பின்றி மூடப்பட்டதால் பல வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டனர். அதில், நீண்டகாலத்திற்குப் பயன்படுத்தக்கூடிய தொகுப்புகளை முன்கூட்டியே பணம் செலுத்தி வாடிக்கையாளர்கள் வாங்கியிருந்தனர்.

இந்நிலையில் வாடிக்கையாளர்களைப் பாதுகாக்க கட்டாய நடவடிக்கைகள் தேவை என்று சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இவ்வாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் சிங்கப்பூரில் பதிவான முன்கட்டண இழப்புகள் கணிசமாக அதிகரித்துள்ளன.

திங்கட்கிழமை (அக்டோபர் 5) வெளியிடப்பட்ட அறிக்கையில் ஜனவரி 1 முதல் செப்டம்பர் 30 வரை மொத்தம் 6.69 மில்லியன் வெள்ளியை வாடிக்கையாளர்கள் இழந்துள்ளனர் என்று சிங்கப்பூர் பயனீட்டாளர் சங்கம் தெரிவித்தது.

இது, 2025ஆம் ஆண்டு முழுவதும் பதிவான 2.71 மில்லியன் வெள்ளி முன்கட்டண இழப்பைவிட ஏறக்குறைய 147 விழுக்காடு அதிகமாகும்.

செப்டம்பர் 10 முதல் 30 வரையிலான காலகட்டத்தில் உடற்பயிற்சி மையங்கள் மூடப்பட்டதைத் தொடர்ந்து ஏறக்குறைய 3.82 மில்லியன் டாலர் மதிப்புள்ள முன்கட்டண இழப்புகள் தொடர்பாக 1,610 புகார்கள் கிடைத்ததாக சங்கம் கூறியது.

இதில் ‘ட்ரூ ஃபிட்னஸ்’, ‘ட்ரூ யோகா’ மூடப்பட்டதால் 3.78 மில்லியன் வெள்ளி இழப்பு தொடர்பான 1,518 புகார்களும் ‘யோகா இங்க்’ மூடப்பட்டதால் 32,826.73 வெள்ளி இழப்பு தொடர்பான 92 புகார்களும் அடங்கும்.

இதில் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவன கலைப்பாளர்களிடம் அவர்களின் கோரிக்கைகளைத் தாக்கல் செய்ய சங்கம் உதவி செய்தது.

ஒரு நிறுவனம் கலைக்கப்படும்போது அதன் வாடிக்கையாளர்கள் பிணையற்ற கடன் வழங்குபவர்களாகக் கருதப்படுவதால் இந்த இழப்புகளுக்கு வலுவானப் பாதுகாப்பு நடவடிக்கைகள் தேவைப்படுவதற்கான அவசியத்தை உணர்த்துகிறது என்றும் அது மேலும் கூறியது.

சங்கத்தின் தலைவர் மெல்வின் யோங், பயனீட்டாளர்களிடமிருந்து கணிசமான அல்லது நீண்ட கால அடிப்படையில் முன்கூட்டியே பணம் பெறப்படும் துறைகளில் கட்டாயப் பாதுகாப்பு நடவடிக்கைகளை அறிமுகப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது,” என்று வலியுறுத்தியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்
யோகாஉடற்பயிற்சிவாடிக்கையாளர்பயனீட்டாளர்