ஆடவரின் காதைக் கடித்ததாக மோட்டார்சைக்கிளோட்டிமீது வழக்கு

ஆடவரின் காதைக் கடித்ததாக மோட்டார்சைக்கிளோட்டிமீது வழக்கு

2 mins read
400761b8-2e36-4cb1-bd78-67d059e28f87
மோட்டார்சைக்கிளோட்டிமீது இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஒருவரின் காதைக் கடித்ததாக மோட்டார் சைக்கிளோட்டிமீது வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.

2024 பிப்ரவரியில் தீவு விரைவுச்சாலையில் ஏற்பட்ட தகராறில் 36 வயது சிங்கப்பூரரான ரோனால்ட் கோ, ஒருவரின் காதைக் கடித்துவிட்டார்.

கோ மீது, ஃபேபியன் குவெக் வெய் குவான் என்பவரின் காதின் ஒரு பகுதியை கடித்தது, குவாக் பெங் கிம்மின் முதுகில் தாக்கி, காலை மிதித்தது ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன

2024 பிப்ரவரி 26ஆம் தேதி பிற்பகல் இரண்டு மணியளவில் சிம்ஸ் வே சாலைக்கு வெளியேறும் பாதைக்குப் பிறகு சாங்கியை நோக்கிச் செல்லும் தீவு விரைவுச் சாலையில் சம்பவம் நடந்தது.

செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 10) நடைபெற்ற விசாரணையில் குவாக் சம்பவத்தை விவரித்தார்.

காரில் குவாக்கும் அவரது மகனும் பயணம் செய்துகொண்டிருந்தனர். அப்போது மோட்டார்சைக்கிள் ஓட்டியான கோவை நோக்கி அவர் எச்சரிக்கை ஒலி எழுப்பினார்.

“நான் நேராகச் சாங்கியை நோக்கி செல்ல விரும்பினேன். என் பாதையில் வந்த மோட்டார் சைக்கிளோட்டி என்னை நோக்கிச் சைகை செய்துகொண்டே இருந்தார்.

“என்னுடைய இருபது வயது மகன், முன்பக்க கண்ணாடியை இறக்கி, என்ன வேண்டும் என்று மோட்டார் சைக்கிளோட்டியிடம் கேட்டார். அப்போது தனது மகனுக்கும் மோட்டார்சைக்கிளோட்டிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது,” என்றார் அவர்.

மோட்டார்சைக்கிளோட்டி தன்னை நிறுத்துமாறு சைகை காட்டியதால் சாலையின் ஒரத்தில் காரை குவாக் நிறுத்தினார்.

“எனது மகனுக்கும் கோவுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதில் இருவரும் ஒருவரையொருவர் தள்ளிக்கொண்டு ஒரு புல்வெளியில் விழுந்தனர்,” என்று குவாக் கூறினார்.

அப்போது, கோ காதைக் கடித்ததால் மகனின் காதிலிருந்து ரத்தம் வழிந்தோடியதாகவும் பின்னர் தாமும் தனது மகனும் டான் டோக் செங் மருத்துவமனைக்குச் சென்றதாகவும் குவாக் கூறினார்.

வழக்கு விசாரணை தொடர்கிறது.

குறிப்புச் சொற்கள்