சிங்கப்பூரில் கடந்த சில ஆண்டுகளில், குறைந்த தீவிரமுடைய சிறுவர் துன்புறுத்தல் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துன்புறுத்தலுக்கு ஆளான சிறுவர்களில் பெரும்பாலானோர் தொடக்கப் பள்ளி மாணவர்கள் என்று கூறப்பட்டது.
2021ஆம் ஆண்டு பதிவான இத்தகைய 2,377 சம்பவங்களைவிடச் சென்ற ஆண்டு 17 விழுக்காடு அதிகமாக 2,787 சம்பவங்கள் பதிவாயின.
துன்புறுத்தல் சம்பவங்கள் அதிகம் பதிவானதற்கு, அதிகரிக்கும் விழிப்புணர்வு, குடும்ப வன்முறை குறித்துப் புகாரளித்தல், மேம்பட்ட கண்டறியும் முறை ஆகியவை காரணம் என்று கருதப்படுகிறது.
சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு, செப்டம்பர் 26ஆம் தேதி முதல்முறையாக வெளியிட்ட குடும்ப வன்முறை அறிக்கையில் இத்தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
குழந்தை, கணவன், மனைவி, முதியோர் துன்புறுத்தல் சம்பவங்கள் தொடர்பான முக்கிய நிலவரங்கள் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
சமூக அமைப்புகள், சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் சிறுவர், பெரியவர் பாதுகாப்பு சேவை கையாண்ட சம்பவங்களிலிருந்து எடுக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
பொருளியல், கலாசார நெறிகள், குடும்பச் சூழல், சமூக விழிப்புணர்வில் மாற்றங்கள் போன்றவற்றால், குடும்ப வன்முறைச் சம்பவங்கள் நேர்வதைச் சுட்டிய அமைச்சு, அச்சம்பவங்களை இரு படிநிலைகளில் வகைப்படுத்தியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
முதல் அடுக்குச் சூழல்கள்
முதல் அடுக்குச் சூழல்களின்கீழ் வரும் சம்பவங்களைச் சமூக அமைப்புகள் கையாள்கின்றன. இந்தச் சம்பவங்கள் பொதுவாக பாதிக்கப்படக்கூடியவருக்குக் குறைவான அல்லது மிதமான அளவில் ஆபத்தை ஏற்படுத்துபவை.
இரண்டாம் அடுக்குச் சூழல்கள்
இரண்டாம் அடுக்குச் சூழல்களின்கீழ் வரும் சம்பவங்களை அமைச்சு கையாள்கிறது. இவற்றில் பெரும்பாலான சம்பவங்களுக்குச் சட்டபூர்வ நடவடிக்கை தேவைப்படும்.
சிறுவர் துன்புறுத்தல் சம்பவங்கள் தொடர்பான முதல் அடுக்குச் சூழல்கள் அதிகரித்துள்ளன. அதாவது, அமைச்சு, சமூகப் பங்காளிகள் ஆகியவற்றின் முயற்சிகளால் மக்களிடையே குடும்ப வன்முறைச் சம்பவங்களுக்கான விழிப்புணர்வு அதிகரித்துள்ளதால் அதிக சம்பவங்கள் ஆரம்பகட்டத்திலேயே கண்டறியப்பட்டு வருகின்றன.
அதேபோல் கணவன், மனைவி தொடர்பான முதல் அடுக்குச் சூழல்களின்கீழான துன்புறுத்தல் சம்பவங்களும் எளிதில் பாதிக்கப்படக்கூடிய முதியவர்கள் துன்புறுத்தல் சம்பவங்களும் அதிகரித்துள்ளன.
எளிதில் பாதிக்கப்படக்கூடிய, இரண்டாம் அடுக்குச் சூழல்களின்கீழ் பெரியவர்களைத் துன்புறுத்தும் சம்பவங்கள் குறைந்துள்ளன.
இதுகுறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய சமுதாய, குடும்ப மேம்பாட்டுத் துணை அமைச்சர் சுன் ஷுவெலிங், “அமைச்சு புதிதாக வெளியிட்டுள்ள இந்த அறிக்கை மூலம் குடும்ப வன்முறைச் சம்பவங்களை எளிதில் கண்காணிக்க முடியும். இதை முற்றிலும் களைய முடியாது என்றாலும் அரசாங்கம் இயன்றவரை இதைத் தணிக்க முயற்சி எடுத்துவரும்,” என்றார்.
“சமூகப் பங்காளிகளிடம் தெரிவிக்கப்படும் புதிய குடும்ப வன்முறைச் சம்பவங்கள், அறிக்கையில் இடம்பெறும். பிள்ளைகளை ஒழுக்கமாக வளர்க்க வேண்டும் என்பதற்காகச் சில பெற்றோர் கண்டிப்பான முறையில் பிள்ளைகளைக் கையாள்கின்றனர். அது சில நேரங்களில் குடும்ப வன்முறையாக மாறக்கூடும். பொதுமக்களும் குடும்ப வன்முறைச் சம்பவங்களை நேரில் கண்டால் உடனடியாக உரிய அமைப்புகளிடம் புகார் அளிக்க வேண்டும்,” என்று அவர் கேட்டுக்கொண்டார்.
குடும்ப வன்முறைச் சம்பவங்களால் பாதிக்கப்படுபவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் ‘பேவ்’ அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி சுதா நாயர், “குடும்ப வன்முறைச் சம்பவங்களால் பாதிக்கப்படுபவர்களுக்கு பல்வேறு வழிகளில் உதவி காத்துக்கொண்டிருக்கிறது. அவர்கள் காவல் நிலையத்தை நாடலாம். தேசிய வன்முறை மற்றும் பாலியல் துன்புறுத்தல் உதவித் தொலைபேசி எண் மூலம் தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம். எந்த பிரச்சினையையும் சிறிது, பெரிது என்று வகைப்படுத்தக் கூடாது. பிரச்சினை என்றாலே அதற்குத் தீர்வு காண்பதுதான் முக்கியம்,” என்றார் அவர்.


