மருத்துவத் துறை ஊழியர்கள் துன்புறுத்தப்படும் சம்பவங்கள் அதிகரிப்பு: சுகாதார அமைச்சு

மருத்துவத் துறை ஊழியர்கள் துன்புறுத்தப்படும் சம்பவங்கள் அதிகரிப்பு: சுகாதார அமைச்சு

2 mins read
76222cea-4c5a-4076-b603-3c7537ad0d64
2022ஆம் ஆண்டுக்கும் 2024ஆம் ஆண்டுக்கும் இடையே, பொதுச் சுகாதாரப் பராமரிப்பு நிலையங்களால் புகார் செய்யப்பட்ட துன்புறுத்தல், தொல்லைச் சம்பவங்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 1,500லிருந்து 3,000க்குக் கூடியது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

சிங்கப்பூரில், 2022ஆம் ஆண்டுக்கும் 2024ஆம் ஆண்டுக்கும் இடையே, பொதுச் சுகாதாரப் பராமரிப்பு நிலையங்களால் புகார் செய்யப்பட்ட துன்புறுத்தல், தொல்லைச் சம்பவங்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 1,500லிருந்து 3,000க்குக் கூடியது.

சுகாதார அமைச்சின் பேச்சாளர் அந்தத் தகவலைத் தெரிவித்தார்.

சுகாதாரப் பராமரிப்புத் துறையில் துன்புறுத்தல், தொல்லைச் சம்பவங்களைத் தடுக்கும் நோக்கத்துடன் 2023ஆம் ஆண்டு டிசம்பரில், சுகாதார அமைச்சர் ஓங் யி காங் முத்தரப்புக் கட்டமைப்பைத் தொடங்கிவைத்தார்.

எத்தகைய செயல்களும் கருத்துகளும் துன்புறுத்தல், தொல்லை விளைவித்தலாக எடுத்துக்கொள்ளப்படும், துன்புறுத்துபவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படக்கூடிய நடவடிக்கைகள் ஆகியவை அந்த முத்தரப்புக் கட்டமைப்பில் அடங்கும்.

இதற்கு முன்னர், சிட்டி யுசிரா ஏ. மஜீத் எனும் தாதியிடம், நோயாளி ஒருவர் கோபமடைந்து கத்தரிக்கோலை எறிந்தார்.

இங் டெங் ஃபொங் மருத்துவமனையில் நடந்த அந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, அவரது சக ஊழியர்கள் பாதுகாப்பு அதிகாரியிடம் அது பற்றித் தெரிவித்தனர். அந்த நோயாளி பின்னர் கைதுசெய்யப்பட்டார்.

அந்த மருத்துவமனையில் நடந்த மற்றொரு சம்பவத்தில், அத்தகைய இரண்டு நோயாளிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.

15 ஆண்டுகளாகத் தாதியாகப் பணிபுரிந்துவரும் சிட்டி, பல தருணங்களில் நோயாளிகளால் துன்புறுத்தப்பட்டுள்ளார். முன்னர், அது பணியின் ஒரு பகுதி என்று நினைத்து அத்தகைய நடத்தையை ஏற்றுக்கொண்ட அவர், இப்போது அதனை ஏற்றுக்கொள்வதில்லை.

துன்புறுத்தும் நோயாளிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவர்

துன்புறுத்தல் சம்பவங்களைச் சமாளிப்பதற்கான வழக்கமான நடைமுறைகள் பற்றி முத்தரப்புக் கட்டமைப்பில் விவரிக்கப்பட்டுள்ளன.

அவ்வாறு செய்பவர்களை நிறுத்தும்படி உறுதியாகச் சொல்வது, பாதுகாப்பு அதிகாரிகளை அழைப்பது போன்றவை அவற்றில் அடங்கும்.

சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனையில் மூத்த ஆலோசகராகப் பணியாற்றும் டாக்டர் லிம் ஜியா ஹாவ், துன்புறுத்தல் சம்பவங்கள் நடக்கும்போது அவற்றில் தலையிட மருத்துவமனை அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

ஆபத்தான சூழ்நிலைகளில், அவர்கள் உதவிக்கு அழைப்பு விடுக்கலாம் என்றும் அவர் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்
தாதியர்துன்புறுத்தல்சுகாதார அமைச்சு