இணையத்தளங்கள் வழியாக நடந்த வீட்டு வாடகை மோசடி எண்ணிக்கை 2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் சென்ற ஆண்டில் ஐந்து மடங்கு அதிகரித்து 979 ஆகியது.
உள்துறை துணை அமைச்சர் சுன் ஸுவெலிங் நாடாளுமன்றத்தில் இதனைத் தெரிவித்தார்.
பாசிர் ரிஸ்-பொங்கோல் குழுத் தொகுதி உறுப்பினர் திருவாட்டி இயோ வான் லிங்கிற்குப் பதில் அளித்துப் பேசிய சமுதாய, குடும்ப மேம்பாட்டுத் துணை அமைச்சருமான அவர், பொதுவாக அத்தகைய மோசடிகள் இணைய வர்த்தகத் தளங்கள் சமூக ஊடகத்தளங்களில் இடம்பெறுவதாகக் கூறினார்.
அவற்றில் பொதுவாக சொத்து முகவர்கள் போல் நடித்து மோசடிக்காரர்கள் ஏமாற்றுகிறார்கள். மோசடிக்காரர்கள் அத்தகைய தளங்களில் வீட்டு வாடகைப் பட்டியலை வெளியிடுகிறார்கள்.
அதைக் காணும் அப்பாவிகள் அதில் இருக்கும் தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்கிறார்கள்.
அதனை அடுத்து மோசடிக்காரர்கள் உண்மையான முகவர்களைப் போலவே நடித்து பேசி, முகவரின் தொழில் அடையாள அட்டையையும் வாடகை வீட்டின் படங்களையும் காணொளிகளையும் அனுப்புகிறார்கள். சில மோசடிக்காரர்கள் வீட்டு முதலாளியைப் போன்றுகூட நடிக்கிறார்கள்.
வைப்புத்தொகையைச் செலுத்தினால் வீட்டைப் பார்க்கலாம் என்று சொல்லி பணத்தை பெற்றுக்கொள்வார்கள். பணம் கிடைத்ததும் மறைந்துவிடுகிறார்கள் என்று அமைச்சர் விளக்கினார்.
இணையத்தளங்களுடன் சேர்ந்து காவல்துறை செயல்பட்டு வருகிறது. அத்தகைய தளங்களில் தலைகாட்டும் சந்தேகத்திற்கு இடமான கணக்குகளையும் விளம்பரங்களையும் அகற்றுவதற்கு காவல்துறை முயன்று வருகிறது.


