சிங்கப்பூரில் பூனை உரிமத் திட்டம் நடப்புக்குவந்த ஈராண்டுகளில், 111,000க்கும் அதிகமான செல்லப் பூனைகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளதாகத் தேசிய வளர்ச்சி, வெளியுறவுக்கான துணையமைச்சர் ஆல்வின் டான் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாகத் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 31) அவர் வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில், தங்களின் செல்லப் பூனைகளுக்கு இன்னும் நுண்சில்லு பொருத்தாமலும் உரிமம் பெறாமலும் இருப்பவர்கள், விரைந்து அவற்றைச் செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.
மேலும், தங்களது செல்லப் பூனைகளுக்கு நுண்சில்லுகள் பொருத்துவதும் உரிமம் பெறுவதும், அவை எங்குள்ளன என்பதைக் கண்டறியும் திறன், உரிமையாளரின் பொறுப்பு ஆகியவற்றை அதிகரிக்கும்; மேலும், காணாமற்போன பூனைகளை அடையாளம் கண்டு, அவற்றை உரிமையாளர்களுடன் மீண்டும் சேர்க்கவும் அது உதவும் என அவர் கூறினார்.
பூனைகள் நிர்வாகக் கட்டமைப்பின்கீழ், 2024ஆம் ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி தொடங்கப்பட்ட அத்திட்டத்தின் ஈராண்டு நிலைமாற்றக் காலகட்டம் ஆகஸ்ட் 31ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
அக்காலகட்டத்தில் இலவசமாக வழங்கப்பட்ட வாழ்நாள் உரிமத்திற்குப் பதிலாக, செப்டம்பர் 1ஆம் தேதி முதல் கருத்தடை செய்யப்பட்ட பூனைகளுக்கு $15 கட்டணமும் கருத்தடை செய்யப்படாத பூனைகளுக்கு $90 கட்டணமும் ஆண்டிற்கு வசூலிக்கப்படும். உரிமமின்றிப் பூனைகளை வளர்ப்போருக்கு $5,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.
செப்டம்பர் 1ஆம் தேதி முதல் வீவக வீடுகளில் அதிகபட்சம் இரண்டு பூனைகளும் தனியார் வீடுகளில் 3 பூனைகள் அல்லது நாய்களும் வளர்க்க அனுமதி உண்டு. நிலைமாற்றக் காலத்தில் உரிமம் பெற்றவர்கள் கூடுதல் பூனைகளைத் தொடர்ந்து வைத்திருக்கலாம்.


