ஜூரோங் ஈஸ்ட் வட்டாரத்தில் உள்ள ‘ஜெம்’ கடைத்தொகுதியில் கேத்தே சினிபிளெக்ஸ் திரையரங்கு அதன் கதவுகளை வியாழக்கிழமை (மார்ச் 27) நிரந்தரமாக மூடுகிறது.
திரையரங்கை நிர்வகிக்கும் எம்எம்2 ஏஷியா நிறுவனம் அதைத் தெரிவித்தது.
இதற்குமுன் சென்ற ஆண்டு பிப்ரவரி, ஜூன் மாதங்களில் முறையே புக்கிட் பாத்தோக்கின் வெஸ்ட் மால் கடைதொகுதியிலும் அங் மோ கியோவிலும் உள்ள கேத்தே திரையரங்குகளை எம்எம்2 ஏஷியா மூடியது.
அனைத்துலக வர்த்தக சொத்துச் சந்தை முதலீட்டு பங்குகள் நிறுவனத்துடன் வாடகை தொடர்பில் ஓராண்டுக்கு மேல் நீடித்த பேச்சுவார்த்தைக்குப் பின் திரையரங்கை மூட முடிவெடுக்கப்பட்டது.
எம்எம்2 ஏஷியா ஏறக்குறைய $4.3 மில்லியன் வாடகையைச் செலுத்த முடியாமல் போனதை அடுத்து ரெயிட் நிறுவனம் கேத்தே சினிபிளெக்ஸ் திரையரங்கிற்கான குத்தகையை ரத்து செய்தது.
திரையரங்கை மூடும் வருத்தமளிக்கும் முடிவு தவிர்க்கமுடியாதது என்றபோதும் தற்போதைய சந்தை நிலவரத்துக்கு ஏற்ப புதிய வாய்ப்புகளை ஆராயப்போவதாக எம்எம்2 ஏஷியா நிறுவனம் சொன்னது.
கொவிட்-19 கிருமிப்பரவலுக்குப் பின் ஏற்பட்ட சவால்களைச் சமாளிக்க அனைத்துலக வர்த்தக சொத்துச் சந்தை முதலீட்டு பங்குகள் நிறுவனம் தந்த ஆதரவுக்காகவும் எம்எம்2 ஏஷியா நன்றி தெரிவித்தது.