காஸ்வே டாக்சி ஒதுக்கீடு 500ஆக அதிகரிப்பு

காஸ்வே டாக்சி ஒதுக்கீடு 500ஆக அதிகரிப்பு

கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

06 Nov 2026 - 2:22 pm

2 mins read

இம்மாதம் 16ஆம் தேதிமுதல் மலேசியாவுக்குச் செல்லும் அல்லது அங்கிருந்து வரும் பயணிகளுக்குக் கூடுதல் எல்லைதாண்டிய டாக்சிகள் பயன்பாட்டுக்குக் கிடைக்கும்.

அப்போது இரு நாடுகளிலிருந்தும் இயக்கப்படும் அத்தகைய வாகனங்களுக்கான ஒதுக்கீடு 300லிருந்து 500ஆக உயர்த்தப்படும்.

ஜோகூர் கடற்பாலம் வழியாகப் பயணிகளை ஏற்றிச் செல்வதற்காக ‘சிடிஜி ஸிக்’ (CDG Zig), மலேசியாவின் ‘கூம்போல்’ (Kumpool) ஆகிய மேலும் இரு நிறுவனங்களுக்கும் உரிமங்கள் வழங்கப்படும். தற்போது எல்லைதாண்டிய சேவையை வழங்க அனுமதிக்கப்பட்டுள்ள ஒரே நிறுவனமான ‘கிராப்’ உடன் இவை இரண்டும் இணையும்.

இரு நாடுகளுக்கும் இடையேயான எல்லைதாண்டிய பயண இணைப்பை வலுப்படுத்துவதற்கும் பயண அனுபவத்தை மேம்படுத்துவதற்கும் இரு நாடுகளும் கொண்டுள்ள உறுதிப்பாட்டை இந்த நடவடிக்கைகள் வெளிப்படுத்துவதாக வெள்ளிக்கிழமை (நவம்பர் 6) சிங்கப்பூர், மலேசியப் போக்குவரத்து அமைச்சுகள் இணைந்து வெளியிட்ட கூட்டு அறிக்கையில் தெரிவித்துள்ளன.

இந்த நடவடிக்கை இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தையும் மக்களிடையேயான உறவையும் தொடர்ந்து மேம்படுத்தும் என்றும் அவை கூறின.

புதிய ஒதுக்கீடு, சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் 500 உரிமம் பெற்ற எல்லைதாண்டிய டாக்சிகள் என்ற இலக்கை எட்டுவதற்கான இறுதிப் படியைக் குறிக்கிறது. இந்த எண்ணிக்கை இரு அமைச்சுகளாலும் 2025ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கையில் முதன்முதலில் அறிவிக்கப்பட்டது.

முன்னதாக, மே 4ஆம் தேதி எல்லைதாண்டிய டாக்சி கட்டமைப்பில் செய்யப்பட்ட மாற்றத்தின்போது, இரு நாடுகளுக்குமான ஒதுக்கீடு 200லிருந்து 300ஆக உயர்த்தப்பட்டது. சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையிலான இத்தகைய சேவைகளை மேலும் நீக்குப்போக்கானதாகவும் ஈர்க்கக்கூடியதாகவும் மாற்றுவதே அதன் நோக்கம்.

பெரிய குழுக்களாகவோ வர்த்தக ரீதியாகவோ பயணம் செய்பவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் முயற்சியாக, அந்த ஆரம்பக்கட்ட ஒதுக்கீட்டு அதிகரிப்பில் பெரிய, ஆடம்பர வாகனங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்
ஜோகூர்சிங்கப்பூர்டாக்சி