வட்ட ரயில் பாதை (சிசிஎல்) சேவையில் திட்டமிட்டபடி சுரங்கப் பாதை மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் சேவை இடையூறுகள் இருந்து வருகின்றன.
மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட முதல் வாரத்தில் சுமார் 30,000 பயணிகள் உச்சநேரத்தில் வழங்கப்படும் இடைவழிப் பேருந்துச் சேவைகளைப் பயன்படுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலான நேர இடைவெளியில் ரயில்கள் இயங்குவதால் ஏற்படக்கூடிய கூட்ட நெரிலைக் குறைக்க அந்தச் சேவைகள் தொடங்கப்பட்டன.
தினமும் சராசரியாக 480,000 பயணிகள் ரயில் சேவை இடையூறால் பாதிக்கப்படுகின்றனர். சுரங்கப் பாதை மேம்பாட்டுப் பணிகள் இம்மாதம் 18ஆம் தேதி முதல் வரும் ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி வரை தொடரும்.
வட்ட ரயில் பாதையில் அமைந்துள்ள மவுண்ட்பேட்டன், டக்கோட்டா, பாய லேபார் நிலையங்கள் மேம்பாட்டுப் பணிகளால் பாதிக்கப்பட்டுள்ளன.
ரயில் சேவையில் இடையூறுகள் ஏற்படவிருந்ததை முன்னிட்டு வார நாள்களில் ஐந்து இடைவழிப் பேருந்துச் சேவைகள் இம்மாதம் 5ஆம் தேதியிலிருந்து வழங்கப்பட்டு வருகின்றன. மேம்பாட்டுப் பணிகளுக்கான ஏற்பாடுகளைப் பயணிகள் நன்கு புரிந்துகொள்ள உதவுவது இந்த ஏற்பாட்டின் நோக்கமாகும்.
வட்ட ரயில் பாதையில் பயண நேரம் 10லிருந்து 20 நிமிடங்கள் அதிகரித்ததாகப் போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் சுன் ஷுவெலிங் புதன்கிழமை (ஜனவரி 28) தெரிவித்தார். சிலர், வட்ட ரயில் பாதைக்குப் பதிலாக வடகிழக்குப் பாதையில் பயணம் செய்வது போன்ற மாற்று வழிகளை நாடினர்.
சிராங்கூன் எம்ஆர்டி நிலையத்துக்கு வெளியே பயணிகள் இடைவழிப் பேருந்துச் சேவைகளில் செல்லக் காத்திருக்கும் இடத்தில் திருவாட்டி சுன், செய்தியாளர்களிடம் பேசினார். வட்ட ரயில் பாதைக்கான ஏற்பாடுகளைப் பயணிகள் மேலும் நன்கு புரிந்துகொள்ளும்போது கூட்ட நெரிசலைச் சமாளிக்கப் பணியில் ஈடுபடுத்தப்படும் வழிகாட்டிகள், தொண்டூழியர்களின் எண்ணிக்கை குறைக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
உச்ச நேரத்தில் கூட்ட நெரிசலைச் சமாளிக்க அதிக எண்ணிக்கையில் வழிகாட்டிகள் (crowd marshalls) பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக செவ்வாய்க்கிழமை (ஜனவரி 27) ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் ஃபாரம் பகுதியில் வெளியிடப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து திருவாட்டி சுன் இவ்வாறு பேசினார்.
தொடர்புடைய செய்திகள்
சுரங்கப் பாதை மேம்பாட்டுப் பணிகளில் கிட்டத்தட்ட 10 விழுக்காட்டுப் பணிகள் நிறைவடைந்துவிட்டதாகவும் திட்டமிட்டபடி பணிகள் வரும் ஏப்ரல் மாதத்துக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் திருவாட்டி சுன் தெரிவித்தார்.

