வட்ட ரயில் பாதையில் சேவைகள் வரும் ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி முதல் வழக்கநிலைக்குத் திரும்பும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட்ட ரயில் பாதை சேவைகள் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் இயல்புநிலைக்குத் திரும்பும் என்று முதலில் கணிக்கப்பட்டிருந்தது. இப்போது அப்பணிகள் திட்டமிட்டதற்கு முன்னரே நிறைவடையவுள்ளன.
எனினும், ஏப்ரல் 11ஆம் தேதி முதல் வார இறுதிகளில் வட்ட ரயில் பாதைச் சேவைகள் குறைவான நேரத்துக்கு இயங்கும். வட்ட ரயில் பாதையின் எஞ்சிய பகுதியைத் திறக்கும் நடவடிக்கைகளின் கடைசிக் கட்டத்தை முன்னிட்டு சோதனைகளை நடத்த வார இறுதியில் சேவை நேரம் குறைக்கப்படுகிறது.
மவுன்ட்பேட்டன், டக்கோட்டா, பயா லேபார் நிலையங்களுக்கிடையே சுரங்க ரயில் பாதைகளின் மேம்பாட்டுப் பணிகள் முன்னரே நிறைவடையும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் வியாழக்கிழமை (மார்ச் 26) தெரிவித்தது. மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளும் குழுக்கள், சிக்கலான பணிகளை மேற்கொள்வதில் அனுபவம் பெற்றதால் அவை நேரத்தை மிச்சப்படுத்தியுள்ளதாக ஆணையம் குறிப்பிட்டது.
டக்கோட்டா நிலையத்தில் வியாழக்கிழமை காலை செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்து தற்காலிக அமைச்சர் ஜெஃப்ரி சியாவ், பணிகள் மிகவும் சீரான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதனால் ரயில் சேவைகள் திட்டமிடப்பட்டதற்கு முன்னரே இயல்புநிலைக்குத் திரும்பவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் உச்சநேரத்தில் நான்கு இடைவழிப் பேருந்துச் சேவைகள் ஏப்ரல் 10லிருந்து 13ஆம் தேதி வரை தொடர்ந்து இயங்கும். ஆனால், அவை அந்தக் காலகட்டத்தில் கூடுதல் இடைவெளியில் செயல்படும். ஏப்ரல் 13ஆம் தேதிக்குப் பிறகு அச்சேவை நிறுத்தப்படும்.
வட்ட ரயில் பாதையின் எஞ்சிய பகுதியைத் திறக்கும் பணிகளை முன்னிட்டு சோதனைகள் நடத்தப்படவுள்ளன. ஹார்பர்ஃபிரண்ட், மரினா பே நிலையங்களை இணைக்கும் வட்ட ரயில் பாதைப் பகுதி இவ்வாண்டு நடுப்பகுதியில் திறக்கப்படும்.
அப்பணிகளுக்கு வழிவிட ஒட்டுமொத்த வட்ட ரயில் பாதையிலும் ஏப்ரல் 11 முதல் மே 17ஆம் தேதிக்கு இடைப்பட்டக் காலத்தில் ரயில் சேவைகள் தாமதமாக காலை ஒன்பது மணிக்குத் தொடங்கி இரவு 11 மணிக்கு நிறைவடையும்.

