தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பயனீட்டாளர் பாதுகாப்பு: இனி போட்டித்தன்மை, பயனீட்டாளர் ஆணையம் கவனிக்கும்

2 mins read
e78a6e55-524b-48fb-9687-fc826f225e15
சிசிசிஎஸ் ஆணையத்தின் சின்னம். - படம்: CCCS / ஃபேஸ்புக்

செவ்வாய்க்கிழமை (ஜூலை 1) முதல் பயனீட்டாளர்களைப் பாதுகாப்பது தொடர்பிலான விவகாரங்களைக் கையாண்டு விதிமுறைகள் மூலம் ஒழுங்கப்படுத்தும் பொறுப்பு சிங்கப்பூர்ப் போட்டித்தன்மை, பயனீட்டாளர் ஆணையம் (சிசிசிஎஸ்) ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து விதிமுறைகள் முலம் ஒழுங்கு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் சிசிசிஎஸ் ஆணையத்தின் பணிகள் விரிவுபடுத்தப்படுகின்றன.

முன்னதாக என்டர்பிரைஸ்எஸ்ஜிக்குக்கீழ் செயல்பட்ட பயனீட்டாளர் பொருள் பாதுகாப்பு அலுவலகம் (சிசிஎஸ்ஓ), வர்த்தக அளவெடுப்பு முறைகளை சீராக்கும் எடை, அளவெடுப்பு அலுவலகம் (டபிள்யுஎம்ஓ) இரண்டும் இனி சிசிசிஎஸ் ஆணையத்தின்கீழ் வரும். சிசிசிஎஸ் திங்கட்கிழமை (ஜூன் 30) இதனைத் தெரிவித்தது.

நியாயமான வர்த்தக நடைமுறைகள், பயனீட்டாளர் பொருள் பாதுகாப்பு நிபந்தனைகள் போன்றவை சார்ந்த விவகாரங்களுக்கு வர்த்தகர்களும் பயனீட்டாளர்களும் தங்களை நாடலாம் என்று சிசிசிஎஸ் குறிப்பிட்டது.

“சிங்கப்பூரில் செயல்படும் வர்த்தகங்கள், பாதுகாப்பு விதிமுறைகளைப் பூர்த்தி செய்யும் பொருள்களை விற்பதையும் வாடிக்கையாளர்களைக் கவனித்துக்கொள்ளும்போது சரியான கணக்கெடுப்பு முறைகளை உபயோகிப்பதையும் உறுதி செய்வதன் மூலம் வர்த்தகங்களுக்கும் பயனீட்டாளர்களுக்கும் நல்ல வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும் வலுவான, நியாயமான போட்டி மிகுந்த சூழலை உருவாக்கலாம்,” என்று சிசிசிஎஸ் சொன்னது.

போட்டித்தன்மை வாய்ந்த சூழலில் ஒழுங்கு முறைகளை அமல்படுத்துவதையும் பயனீட்டாளர் பாதுகாப்பைக் கண்காணிப்பதையும் சேர்ப்பதன் மூலம் சந்தையில் நாணயமான போக்கைத் தொடர்ந்து வலுப்படுத்தலாம், வர்த்தக ரீதியான புத்தாகத்தை ஊக்குவிக்கலாம், கூடுதல் நம்பகமான வர்த்தகக் களத்தை வளர்க்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிசிசிஎஸ், என்டர்பிரைஸ்எஸ்ஜி இரண்டும் வர்த்தக, தொழில் அமைச்சின்கீழ் வரும் அரசாங்கத்துக்குச் சொந்தமான அமைப்புகளாகும். போட்டித்தன்மை (திருத்த) சட்டம் 2025 நடப்புக்கு வந்ததையடுத்து இந்தப் பொறுப்பு மாற்றம் இடம்பெறுகிறது.

பொறுப்பு மாற்றம், கடந்த மார்ச் மாதம் போட்டித்தன்மை (திருத்த) சட்டம் 2025இன்கீழ் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. வர்த்தக, தொழில் மூத்த துணை அமைச்சர் லோ யென் லிங், இந்தப் பொறுப்பு மாற்றம் பயனீட்டாளர் பாதுகாப்பைப் பொறுத்தவரை சிங்கப்பூரின் ஒழுங்கு முறை அமலாக்கச் சூழலை ஒன்றுசேர்த்துச் சீராக்கும் என்று கடந்த ஏப்ரல் மாதம் குறிப்பிட்டிருந்தார்.

குறிப்புச் சொற்கள்